இந்தியா

ஜூலை 16 முதல் பள்ளிகள் திறப்பு – முதல்வர் அறிவிப்பு!!

புதுச்சேரியில் கொரோனா நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில் வருகிற ஜூலை 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக முதல்வர் ரங்கசாமி அவர்கள் அறிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள், பயிற்சி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மதிப்பீடு முறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன. ஜூலை 31ம் தேதிக்குள் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சில மாநில அரசுகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதிகளை அறிவித்து வருகின்றன.

தமிழகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ரங்கசாமி அவர்கள் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், வருகிற ஜூலை 16ம் தேதி முதல் அங்கு பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கும் என அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது. ஏற்கனவே புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் விரைந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: