தமிழ்நாடு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பலர் வேலையின்றி தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதியினை பதிவு செய்து விட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு அரசு தரப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது இத்திட்டத்தின் மூலம் 10ஆம் வகுப்பு தோல்வி அடைந்ததற்கான கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.200 எனவும், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி என பதிவு செய்த நபர்களுக்கு ரூ.300 எனவும், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.400 எனவும், பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் படித்து பதிவு செய்தவர்களுக்கு ரூ.600 என 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் 1 ஆண்டு நிறைவு செய்திருந்தாலே போதுமானது.

இந்த உதவித்தொகையை பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படித்த பட்டதாரிகள் பெற முடியாது. இந்த உதவித்தொகை பெற தகுதி உள்ள நபர்கள் www.tnvelaivaaippu.gov.in/Empower என்ற இணையதள முகவரி மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் அல்லது காஞ்சிபுர மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பத்தை இலவசமாக பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்துடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேமிப்பு கணக்கு புத்தக நகலை இணைக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: