
தமிழக வீரர் நடராஜனால் சில மாதங்களாகவே சேலத்தின் பெயர் உலகளவில் பேசப்பட்ட நிலையில், தற்போது அகில இந்திய அளவில் சி.ஏ தேர்வில் முதலிடம் பெற்று சேலத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார் இசக்கி ராஜா.
சேலம் மாவட்டத்திலுள்ள சின்ன முனியப்பன் கோவில் பகுதியில் வசிக்கும் ஆறுமுகத்தின் மகன் இசக்கி ராஜா. இவர் சாட்டர்ட் அக்கவுண்டன்ட் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் இதற்கான தேர்வு இந்தியா முழுவதும் நடைப்பெற்றது. நேற்று முன்தினம் சிஏ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் , 800 க்கு 553 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். பெற்றோர்கள்,ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் இசக்கி ராஜாவை பாராட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றன.
முதலிடம் பிடித்தது குறித்து இசக்கிராஜா கூறுகையில், தான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே சிஏ தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. அதற்கு என் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தனர் .நம்பிக்கையுடன் தேர்வு எழுதினேன், தேர்ச்சி பெற்றிடுவேன் என உறுதியாக இருந்த நிலையில் முதலிடம் கிடைத்துள்ளது. முதலிடம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கவில்லை, இருந்தாலும் மிக மகிழ்ச்சியாக உள்ளேன்.