தமிழ்நாடு

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் – அமைச்சர் தகவல்!!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அத்திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்கிற கேள்விக்கு அமைச்சர் ஆர்.சக்கரபாணி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அதன் பின்னர் முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதும் அதில் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. முதல் நாளே நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் ரூ.4000 உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தினார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அது தொடர்பாக தற்போது வரை அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையில் ரேஷன் கார்டில் குடும்பத் தலைவியின் புகைப்படம் இருந்தால் தான் இந்த உதவித்தொகை கிடைக்கும் என பல்வேறு அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவி வருகிறது. இதனை நம்பி ரேஷன் கார்டில் மாற்றம் கோரி ஏராளமானோர் விண்ணப்பிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி அவர்களிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் கூறுகையில், தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டு கோரி விண்ணப்பிப்போருக்கு 15 நாட்களுக்குள் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்படுகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் காலாவதியான ரேஷன் பொருட்களை விநியோகம் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக மாநிலத்தின் நிதிநிலைமையை பொறுத்து முதல்வர் அவர்கள் உரிய நேரத்தில் அறிவிப்பார் என தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: