தமிழ்நாடு

அரசு சார்பில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 – குவியும் விண்ணப்பங்கள்!!!

தமிழக அரசு சார்பில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட நிலையில், குடும்பத் தலைவிகளாக ரேஷன் அட்டைகளை மாற்ற விண்ணப்பங்கள் அதிகளவில் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. மே 7 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதும் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்தினார். மேலும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

குடும்பத் தலைவி உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும் என தகவல் வெளி வந்ததை தொடர்ந்து மாவட்டம் வாரியாக குடும்பத் தலைவியின் புகைப்படத்துடன் புதிய ரேஷன் கார்டு கேட்டு அரசு மற்றும் தனியார் இ-சேவை மையங்களில் அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர். ஏற்கனவே ரேஷன் கார்டில் உள்ள குடும்பத் தலைவரின் புகைப்படத்திற்கு பதிலாக குடும்பத் தலைவியின் புகைப்படம் இடம் பெற கேட்டு விண்ணப்பங்களும் குவிகிறது. கடலுார் மாவட்டத்தில் 1,420 ரேஷன் கடைகள் உள்ளன. அதில் 7 லட்சத்து 49 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.

அதில் பலர் குடும்பத்தலைவியின் புகைப்படத்துடன் புதிய ரேஷன் கார்டு கேட்டும், ஏற்கனவே கார்டில் உள்ள குடும்பத் தலைவரின் புகைப்படத்திற்கு பதிலாக குடும்பத் தலைவியின் புகைப்படம் இடம் பெற கேட்டும் விண்ணப்பித்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிப்போர், அந்தியோதயா அன்னயோஜனா திட்ட கார்டு பயன்படுத்துவோர் சிலவற்றில் குடும்ப தலைவர், குடும்பத் தலைவியின் புகைப்படம் மாறியிருக்கும். மேலும் தற்போது புதிதாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து மாற்றித் தரப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: