தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க மறுப்பு!

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்புத் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வந்த நிலையில் இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய மருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இந்த சூழலில் கொரோனா தடுப்பூசிகள் தொடர்பான பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

இந்நிலையில், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக நடைபெற்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் மக்கள் பயன்பாட்டுக்கு அவசர அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒருபுறம் சோதனை நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் அவசர நிலையை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட தீபக் என்ற நபர் உயிரிழந்த நிலையில் பொதுமக்கள் தடுப்பூசி தொடர்பான அச்சத்திலேயே உள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கொரோனா தடுப்பூசிகளைப் பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவிட வேண்டும். தடுப்பூசியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தகுந்த இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

HIGHCOURTINMADURAI 1068x667 1

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா அவசரக்கால சூழ்நிலையில் இதுபோன்ற பொதுநல மனுக்கள் ஏற்புடையதல்ல. மனுதாரர் விரும்பாவிட்டால் தடுப்பூசி போடாமல் இருந்து கொள்ளலாம். அதை தவிர்த்து மொத்தமாக தடுப்பூசிக்கு தடைவிதிக்க கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மனுதாரர் தனது மனுவை வாபஸ் பெறுவதாக கூறிய நிலையில் நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

Back to top button
error: Content is protected !!