ரேஷன் கார்டு பயனர்களிடம் ஏசி, ஜெனரேட்டர் மற்றும் நான்கு சக்கர வாகனம் இருந்தால் அவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
கொரோனா தொற்றுநோய் சூழலுக்கு மத்தியில் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டு பயனர்களுக்கு மத்திய அரசு, அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது. ஆனால், இந்த இலவச பொருட்களை பெறும் பயனர்களிடம் ஏசி, ஜெனரேட்டர், நான்கு சக்கர வாகனம், டிராக்டர், ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுத உரிமம் இருந்தால் அவர்களது ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்றும் இலவசங்களை பெறுவதற்கு உரிமை இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது. அப்படிப்பட்டவர்கள் ரேஷன் பொருட்களை பெறுவது கண்டறியப்பட்டால் கார்டுகள் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஏசி, ஜெனரேட்டர், நான்கு சக்கர வாகனம், டிராக்டர் ஆகியவற்றை வைத்திருப்பவர்கள் ரேஷன் அட்டைகளை மாவட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி ஒப்படைக்காதவர்களின் ரேஷன் அட்டைகள் உணவு வழங்கல் துறை மூலம் கண்டறியப்பட்டாலோ, அல்லது ரேஷன் கார்டுகள் சரிபார்க்கப்படும் போது இவை அனைத்தும் உறுதி செய்யப்பட்டாலோ ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவது மட்டுமின்றி, பயனர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உத்திர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்த உணவுப்பொருள் வழங்கல் அலுவலர் ஆனந்த்குமார் சிங் கூறுகையில், ‘தகுதியில்லாதவர்களின் ரேஷன் கார்டுகள் மூலம் பல அத்தியாவசிய பொருட்கள் விரயம் செய்யப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இப்படி தகுதி இல்லாதவர்கள் பெறும் ரேஷன் பொருட்கள் நிமித்தம் தகுதியுடைய ஆயிரக்கணக்கானோரின் உணவு வழங்கப்படாமல் உள்ளது. அதனால் தகுதி இல்லாதவர்களை கண்டறிந்து கார்டுகளை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தகுதியானவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh