தமிழ்நாடுமாவட்டம்

‘தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் பாஜக அரசு ஒன்றும் செய்யவில்லை’.. ராகுல்காந்தி குற்றச்சாட்டு..

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.

அப்போது அவர் கூறியதாவது,”தமிழ்நாட்டிற்கும் எனக்கும் உளப்பூர்வமான சொந்தம் உள்ளது. தமிழ் மக்களுடன் உணர்வு பூர்வமான பந்தம் இருப்பதால் எனது குடும்பத்தின் அங்கமாக உணர்கிறேன்.நமது நாட்டிற்கு நரேந்திர மோடியும், பாரதிய ஜனதாவும் என்ன செய்தார்கள் என்பதை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பணமதிப்பிழப்பு, சரக்கு சேவை வரி உள்ளிட்ட செயல்பாடுகளால் நாட்டின் பொருளாதாரம் பின்தங்கி அனைத்து துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழ்நாட்டிலும் தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வெறுப்பையும், பிரிவினைவாதத்தையும் வளர்க்கின்ற மோசமான காரியத்தை மோடி செய்கிறார். இந்தியாவை பிளவுபடுத்தும் வகையில் ஆபத்தான செயல்களை செய்து வருகிறார். சாதி, இனம், மொழி, மதம், கலாச்சாரம், சாதிய அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்துகிறார்.

மேலும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை தமிழ்நாட்டில் தோல்வி அடைய செய்வது நம் அனைவரின் கடமை. ஒரே நாடு கலாச்சாரம் ஒரே வரலாறு என்று மோடி சொல்கிறார். அப்படியென்றால் தமிழ் மொழி, இந்தியாவின் மொழி இல்லையா. தமிழர் வரலாறு இந்திய வரலாறு இல்லையா. தமிழ்நாடு வரலாறு பண்பாடு, கலாச்சாரம் இந்தியாவினுடைய தல்லவா. யார் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதற்கு மோடி யார். இந்திய மக்களே எது இந்தியா என்று தீர்மானிப்பார்கள்.

தமிழ்நாட்டில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் அதிமுகவை கட்டுப்படுத்துவது போல் தமிழ்நாடு மக்களையும் கட்டுப்படுத்த மோடியால் முடியாது. இம்மக்களை ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது. தமிழ்நாட்டிற்கு அவர் ஒன்றும் செய்யவில்லை. இதை மோடி புரிந்து கொள்ள வேண்டும். ஆதலால் சட்டப்பேரவைத் தேர்தலில் விவசாயம், தொழில், நெசவாளர்கள், பெண்கள் உள்பட அனைவரையும் பாதுகாக்கும் அரசை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து விவசாயிகள் நினைவுத் தூணுக்கு ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். அவருடன் கரூர் எம்பி ஜோதிமணி உட்பட பலர் இருந்தனர். பின்னர் அவர் மதுரைக்கு புறப்பட்டு சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி திரும்பினார்.

Back to top button
error: Content is protected !!