
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆலங்குடியைச் சேர்ந்தவர் வெள்ளைசாமி மகன் ஆனந்தன்(45). இவர், திருப்பூரில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
தேர்தலுக்காக ஊருக்கு வந்த ஆனந்தன், நேற்று ஆலங்குடி அரசு துவக்கப் பள்ளியில் செயல்பட்ட வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்றார்.
அப்போது போதையில் இருந்த அவர், வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அதன்பின் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். மீண்டும் அங்கு வந்த ஆனந்தன், வாக்குச்சாவடிக்குள் சென்று அங்கிருந்த வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தினார்.
இதையடுத்து, ஆனந்தனை போலீசார் கைது செய்தனர். 491 வாக்குகள் பதிவான நிலையில், அந்த இயந்திரத்தில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
பின்னர், தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்த் மோகன் அங்கு சென்று ஆய்வு செய்தார். அதன்பின், வேறு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கொண்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது.