கொரோனா பரவலின் 2ம் அலையை எதிர்த்து போராட வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு..!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
மகாராஷ்ட்ரா, தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை, ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் திரு.நரேந்திர மோடி, காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலைமை உருவாகி வருவதாகவும், கொரோனா பரவலின் 2ம் அலையை எதிர்த்து போராட வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில், தமிழக அரசு சார்பில், அரசின் தலைமைச்செயலாளர் திரு. ராஜீவ் ரஞ்சன், காவல்துறை தலைமை இயக்குநர் திரு. திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.