இந்தியாதமிழ்நாடு

சாத்தூர் தீ விபத்து.. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரண நிதி..!

விருதுநகர் அருகேயுள்ள சாத்தூரில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மோடி அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன்குளம் என்ற கிராமத்தில், சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று மதியம் அளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி ஒரு பெண் உட்பட ஐந்து பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் சிவகாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

modi

மேலும் படுகாயமடைந்து இதுவரை சிகிச்சைக்காக 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் சாத்தூர் வெடி விபத்தில் இறந்தவர்களுக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும் என மாநில அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து இந்திய பிரதமர் மோடியும் விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும். விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Back to top button
error: Content is protected !!