இந்தியா

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு கரோனா தடுப்பூசிகள் – பிரதமர் மோடி பெருமிதம்

வெளிநாடுவாழ் இந்தியர்களின் செயல்பாட்டை அங்கீகரிக்கும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியில் பங்கு வகிக்கும் அவர்களை ஊக்குவிக்கவும் பிரவசி பாரதிய திவாஸ் நிகழ்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் கொண்டாடப்படும். அந்த வகையில் 16ஆவது பிரவசி பாரதிய திவாஸ் மாநாடு, காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது.

மாநாட்டைத் தொடங்கிவைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு கரோனா தடுப்பூசிகள் மூலம், மனித உயர்களைக் காக்க நாடு தயாராகவுள்ளதாகக் கூறினார்.

அந்த உரையின் போது, ” நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு கரோனா தடுப்பூசிகளுடன் மனித உயர்களைக் காக்க இந்தியா இன்று தயாராகவுள்ளது. இதனை முன்பே இந்தியா செய்துள்ளது. தற்போதும் செய்யவுள்ளது. இந்தியாவின் தடுப்பூசிக்காக உலக நாடுகள் ஆவலுடன் காத்திருக்கின்றன. அதேபோல, தடுப்பூசி போடும் திட்டத்தை எவ்வாறு இந்திய அரசு செயல்படுத்தவுள்ளது என்பதை உலகமே கூர்ந்து கவனித்து வருகிறது.

கரோனா காலத்தில் நமக்கு கிடைத்தப் பாடங்கள் அனைத்தும், இந்தியா தற்சார்ப்பு நாடாக இன்று உருவெடுக்க உந்துதலாக இருந்துள்ளன. முன்னதாக, பிபிஇ (தனிநபர் பாதுகாப்பு கவச உடை) கருவிகள், முககவசங்கள், வெண்டிலேட்டர்கள், பரிசோதனைக் கருவிகள் ஆகியவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துக்கொண்டிருந்தோம். ஆனால் இன்று அனைத்து மருத்துவ உபகரணங்களையும் நாமே தயாரித்து தற்சார்பு இந்தியாவாக உருவெடுத்துள்ளோம்.

புதிய தொழில்நுட்பங்கள் மூலம் ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகள் ஆலோசித்து வருகின்றன” என்றார்.

முன்னதாக, இந்தியாவின் சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசிகளை அவசர காலத்துக்கு பயன்படுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது. இன்னும் சில நாள்களில், இந்தத் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணித் தொடங்கும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

Back to top button
error: Content is protected !!