தமிழ்நாடு

ஆட்சிக்கு வந்தால்.. ஸ்டாலினுக்கு போலீஸ்காரர் கோரிக்கை..

சென்னையை சேர்ந்த போலீஸ்காரர் தமிழ்செல்வன், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு அனுப்பிய கோரிக்கை மனு:நான், போலீசில், 2003 முதல் பணிபுரிகிறேன். சட்டசபை தேர்தல் வாக்குறுதி தொடர்பாக, மனுக்களை, தேர்தல் அறிக்கை வரைவு குழுவுக்கு அனுப்ப, நீங்கள் வெளியிட்ட அறிவிப்பை ஏற்று அனைத்து போலீஸ் சார்பில், இக்கோரிக்கை மனுவை வழங்குகிறேன். அரசு பணிகளில், கூடுதல் பணிச்சுமை, தொடர்ந்து பணிபுரியும் துறையாக போலீஸ் உள்ளது. பலர், மன அழுத்தத்திலும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், குறைந்த சம்பளத்திலும், தமிழகத்தில் பணிபுரிகிறோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற, எந்த அதிகாரிகள், ஆட்சியாளர்கள் முன்வரவில்லை. வரும் தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வரானால், எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். போலீசாருக்கு, 8:00 மணி நேர பணி வரையறைசெய்யப்பட வேண்டும். தினமும் போலீசாரின் குறை, புகார்களை அணுக, மாவட்டந்தோறும் தன்னார்வலர், அடிமட்ட போலீசார் அடங்கிய குழு ஏற்படுத்த வேண்டும்.சங்கம் அமைக்க அனுமதி தேவை. சீருடையில் உள்ள, ‘மெட்டல் பட்டன்’ முறையை மாற்ற வேண்டும்.

வார விடுப்பு அவசியம்.ஞாயிறு, விடுமுறை நாளில் பணிபுரிவோருக்கு, இரட்டை சம்பளம் வழங்க வேண்டும். 10ம் வகுப்பு கல்வி தகுதியில் பணியில் சேர்ந்தோருக்கு, மற்ற அரசு துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், பதவி உயர்வு போன்று, போலீசில் பணியில் உள்ளவர்களுக்கும் வழங்க வேண்டும்.கூடுதலாக பணிபுரியும் நேரங்களுக்கு, சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும். சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி உயர்வு, 25 ஆண்டு என்பதை, 20 ஆண்டாக குறையுங்கள்.அரசு பஸ்களில், பணி நிமித்தமாக செல்லும் போலீசாருக்கு, இலவச பயண சலுகை வழங்குங்கள். வெளி மாவட்ட, மாநிலங்களுக்கு, கைதிகளை அழைத்துச் செல்லும் போலீசாருக்கு சிறப்பு பயணப்படி, உணவுப்படி வேண்டும்.ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும், கைதிகளை அழைத்துச் செல்ல, பிரத்யேக வாகனம் வேண்டும்.

சென்னையை போன்று, பிற மாவட்ட, மாநகரங்களில் பணிபுரிவோருக்கு உணவுப்படி வழங்குங்கள்.சட்டம் – ஒழுங்கு பணியில் உள்ள போலீசாருக்கு, தற்போது வழங்கப்படும் வாகன எரிபொருள் படி, 300ஐ, 1,000 ரூபாயாக உயர்த்துங்கள். குறைந்தபட்சம், 20 லிட்டர் பெட்ரோல் வழங்குங்கள். நிர்வாக வசதி எனக்கூறி, இடமாற்றம் செய்வதை தவிர்த்து வரன்முறைப்படுத்துங்கள். பெண் போலீசாரை, மகளிர் ஸ்டேஷன்களில் மட்டும் பணி அமர்த்துங்கள். பணியின்போது மரணமடைவோருக்கு, 50 லட்சம் ரூபாய், வீரமரணம் அடைந்தால், 1 கோடி ரூபாய், குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாய அரசு பணி வழங்குங்கள்.வழக்கில் சிக்கினால் விடுபட, மாவட்டந்தோறும் சட்ட உதவி மையம், குழு அமைக்க வேண்டும். இவற்றுக்கு எல்லாம் மேலாக, அரசியல் தலையீடு அறவே இருக்கக் கூடாது என்பதை, உங்கள் கட்சியினருக்கு, அறிவுரையுடன், கடும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இக்கடிதம், போலீசாரின்,’வாட்ஸ் ஆப், பேஸ் புக்’ குழு மட்டுமின்றி, சமூக வலைதளங்களில் உலா வருவது, போலீஸ் உயரதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

loading...
Back to top button
error: Content is protected !!