தமிழ்நாடு

மின்வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்ப அனுமதி..!

மின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

களப்பணிக்காக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிகளுக்கு கடந்த 2019இல் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை எதிர்த்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். அதில், தங்களை நிரந்தரமாக்கக்கோரியும், புதிய தேர்வு செய்யக் கூடாது என உத்தரவிடவும் வழக்கு தொடந்தனர்.

இந்த வழக்கு நேற்று (பிப்ரவரி 22) விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கள் நியமனத்தை உறுதி செய்த பிறகுதான் புதியதாக கேங்மேன் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் 2019ஆம் ஆண்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஒப்பந்த ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் தெரிவித்தனர்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் சார்பில், அனைத்து விதிகளையும் பின்பற்றப்பட்டதாகவும், உடற்தகுதி தேர்வு உள்ளிட்ட 70 சதவிகிதப் பணிகள் முடிந்துள்ளதாகவும், புதியதாக கேங்மேன் நியமிக்கப்பட்டாலும், ஒப்பந்தப் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என விளக்கம் கொடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Back to top button
error: Content is protected !!