ஆரோக்கியம்

பழங்களை சாப்பிட எந்த நேரம் சரியானது?

உடலின் ஆரோக்கியத்தை காப்பதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால், தினந்தோறும் ஏதாவது ஒரு பழம் சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை தாக்காது. பழங்களில் பெரும்பாலும் அனைத்து வகையான வைட்டமின்களும், தாதுக்களும், இரும்பு சத்துக்களும் உள்ளன. மேலும், ஒரு சில வகை பழங்களால் நமக்கு சில புற்றுநோய்கள் குணமடைகின்றன என்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை என்றும் நிருபணமாகி இருப்பதால் மருத்துவர்களும் பழங்கள் சாப்பிடுவதை பரிந்துரை செய்கின்றனர். இந்நிலையில், பழங்கள் எடுத்துக்கொள்ளும் போது, நாம் எப்போது சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும்? எத்தகைய பழங்களை சாப்பிடுவது நல்லது என்று பார்க்கலாம்.

எப்போது சாப்பிட வேண்டும்?

உணவு சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் கழித்து பழம் சாப்பிடுவதுதான் பொதுவான நடைமுறையாகும்.

உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து பழங்களை சாப்பிடலாம்.

சிற்றுண்டியாக சாப்பிட விரும்பினால், காலை 11 மணி, மாலை 4 மணி முதல் 5 மணிக்குள்ளாக சாப்பிடுவது சிறந்தது.

மூன்று வேளை உணவுகளின் செரிமானத்துக்கு பாதிப்பு இல்லாமல், பழங்களை மென்று சாப்பிட்டாலே, அதிலுள்ள நார்ச்சத்து மலத்தை எளிமையாக்கும்.

மூன்று வேளைகளில், ஏதாவது ஒரு வேளை பழங்களை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்வது என திட்டமிட்டால், காலை வேளையில் எடுத்துக்கொள்வது சிறந்ததாகும்.

பழங்களை சாப்பிட்ட உடனேயே உணவு சாப்பிடுவது நல்லது அல்ல. ஏனெனில் நாம் சாப்பிட்ட பழங்கள் சரியாக செரிமானம் ஆகாமல் போகலாம். மேலும் அதில் உள்ள ஊட்டச்சத்துக்களும் சரியாக உறிஞ்சப்படாமல் போகலாம். எனவே உணவுக்கும், பழ சிற்றுண்டிக்கும் இடையில் குறைந்தது 30 நிமிட இடைவெளி விட வேண்டும்.

நீரிழிவு நோய் அல்லது செரிமான பிரச்சனைகள் உள்ளவர்களாக இருந்தால் உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அல்லது இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு பழங்களை சாப்பிட வேண்டும்.

சில நேரங்களில் உணவுக்கு முன் எடுத்துக்கொண்டால் நாம் அதிகம் உணவு சாப்பிடுவதையும் பழங்கள்கட்டுப்படுத்தும்.

பழங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அதிக நேரம் பசிக்காமல் இருக்கும்.

இரவு நேரத்தில் படுக்கைக்கு முன் பழங்கள் சாப்பிட கூடாது. பழங்களில் அதிக இனிப்பு இருப்பதால் உடலில் குளுக்கோஸ் அளவை அதிகரித்து இரவில் தூக்கத்தை கெடுத்து விடும். ஆகவே படுக்கைக்கு செல்லும் 3 மணி நேரத்திற்கு முன் சாப்பிடுவது சிறந்தது.

எப்படிச் சாப்பிடலாம்

சில பழங்களை சாப்பிடும்போது அதனுடன் வேறு சில பொருட்களையும் சேர்த்து சாப்பிடுவது கூடுதல் சுவையாக இருக்கும்.

வெள்ளரிப்பழம் மற்றும் விளாம்பழத்துடன் பனைவெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால், சுவை அதிகரிக்கும். வயிற்று பிரச்சனைகள் தீரும்.

இதையும் படிங்க:  உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும்! ஏன்?

பலாப்பழத்துடன் தேன் சேர்த்து சாப்பிடும்போது, பலாப்பழத்தால் ஏற்படும் மந்த உணர்வை தடுக்கலாம்.

அன்னாச்சிப்பழம் சாப்பிடும்போது, காரப்பொடி சேர்த்த உப்பு போட்டு சாப்பிடும்போது சுவை அதிகரிக்கும்.

மாதுளை மற்றும் திராட்சை பழங்கள் சாப்பிடும்போது கொட்டையுள்ள பழங்களை சாப்பிட்டால் மட்டுமே முழுப் பலன்கள் கிடைக்கும்.

இவற்றில் கொட்டையில்லாத நவீன ரகங்கள் சுவை கொடுக்குமே தவிர, சத்துகளைக் கொடுக்காது.

ஆரஞ்சுப் பழங்களை நார்ச்சத்துடன் முழுமையாகச் சாப்பிடவேண்டும்.

பருவ காலத்தில் இயற்கையாக விளையும் பழங்களைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டால், வாழ்க்கைப் பருவமும் அதிகரிக்கும்.

பொதுவாக பழங்களை வெட்டியவுடன் சாப்பிடுவது நல்லது. அவற்றை வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சில நாட்கள் கழித்து சாப்பிடுவது சரியல்ல.

எந்த பழங்கள் நல்லது

ஆப்பிளில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் பிளாவோனாய்ட்ஸ் போன்றவை வைட்டமின் “சி” சத்துக்களை மேம்படுத்துவதுடன், பெருங்குடல் புற்று நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களை குறைக்கிறது.

ஆரஞ்சு பழங்கள் சாப்பிடுவதால் சளி தொல்லை (ஜலதோஷம்) நீங்குவதுடன் கொழுப்பைக் குறைக்க உதவும். சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, அவை வராமலும் தடுக்கிறது.

பப்பாளிப்பழத்தில் உள்ள கரோட்டேன் சத்துக்கள் கண்களுக்கு மிகவும் நல்லது.

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் இருப்பதால், இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய் காரணிகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

கிவி பழத்தில் பொட்டாசியம், மக்னீஷியம், வைட்டமின்” ஈ” மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

தர்ப்பூசணி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது லைக்கோபீன் என்னும் புற்று நோயை எதிர்த்துப் போராடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: