தமிழ்நாடுமாவட்டம்

இருட்டில் உலா வரும் வெள்ளை உருவம்! அமானுஷ்யம் என மக்கள் அச்சம்..!

இருட்டில் வெள்ளையாக உருவம் ஒன்று நடந்து செல்வது போன்ற வீடியோ பரவலால் காக்காபாளையம் பகுதி மக்கள் வெளியே வருவதற்கே அச்சப்பட்டு வீடுகளில் முடங்கியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து காக்காபாளையம் செல்லும் வழியில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில், இரவு நேரத்தில் பயணிக்கவே பலரும் பயப்படுவர். அந்தளவிற்கு சிறிதளவு வெளிச்சமும் இன்றி கும்மிருட்டாக இருக்கும் அவ்வழியாக, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் சிலர், வெள்ளை நிற உடையில் அமானுஷ்ய உருவம் ஒன்று நடந்து செல்வதை பார்த்துள்ளனர்.

பின்னர் அவ்வுருவம் உலாவுவதை அவர்கள் தங்களது செல்ஃபோனிலும் பதிவு செய்தனர். 30 விநாடிகள் வரை எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், வெள்ளையான உருவம் ஒன்று நடந்து செல்கிறது. சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவால், காக்காபாளையம் பகுதி மக்கள் இரவு நேரத்தில் பேய் உலவுவதாக வெளியே வராமல் அச்சத்தில் உள்ளனர்.

பொதுவாக இருட்டில் வெள்ளையாக தெரியும் எதுவும் தனித்தே தெரியும். அதிலும் துணி போன்ற ஒரு பொருள் காற்றில் ஆடுவது போல் தெரிந்தால் போதும், அமானுஷ்யம், பேய், பிசாசு என வதந்திகள் வரிசை கட்டும். முதலில் இது போன்ற மூடத்தனமான விஷயங்களுக்கு மக்கள் அச்சம் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஆண்டாண்டு காலமாக பேய்கள், ஆவிகள் என்று சொல்லப்படுபவை அனைத்தும் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்மையே அணிகின்றன என்ற, சின்ன விஷயத்தை சிந்தித்தாலே, மக்கள் இந்த கட்டுக்கதைகளிலிருந்து விடுபடலாம்.

இளைஞர்களும் பயனுள்ள நல்ல விஷயங்களை நவீன தொழில்நுட்பமான ஸ்மார்ட்ஃபோன் மூலம் செய்ய வேண்டும், பகிர வேண்டுமே தவிர, இது போன்ற யாருக்குமே உதவாத, பொய் பித்தலாட்டங்களை பதிவு செய்து, அதை அனைவருக்கும் பகிர்வது என்பது, தாங்கள் மட்டுமின்றி சமூகத்தையும் மூடர் கூடமாக்க முயற்சிக்கும் செயலாகும்.

Back to top button
error: Content is protected !!