இந்தியா

வங்கி ATM இயந்திரங்களில் பணமில்லை என்றால் ரூ.10,000 அபராதம் – ஆர்பிஐ அறிவிப்பு!

வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வங்கி ATM இயந்திரங்களில் தொடர்ந்து 10 மணி நேரத்திற்கு பணம் இல்லாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் இருந்து ரூ.10,000 அபராதமாக வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து வகையான பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளை நிர்வகித்து வரும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வங்கி ATM களில் பணம் இல்லையென்றால் அந்த வங்கிகளுக்கு அபராதம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. வங்கி ATM இயந்திரங்களில் ஒரு மாதத்தில், தொடர்ந்து 10 மணி நேரத்துக்கும் மேலாக பணம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் வங்கிகளுக்கு ரூ.10,000 அபராதமாக வசூலிக்கப்படும்.

இந்த புதிய அறிவிப்புகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருப்பதாக RBI அறிவித்துள்ளது. அந்த வகையில் அனைத்து வங்கிகளுக்கும் சொந்தமான ATM இயந்திரங்களில் அல்லது வங்கிகளை சாராத நிறுவனங்கள் செயல்படுத்தும் ATM களில், கடந்த ஒரு மாதத்தில் பணம் இல்லாமல் இருந்த நேரங்கள் குறித்த விவரங்களை செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

அதே நேரத்தில் நிறுவனங்களால் தனித்து செயல்படுத்தப்படும் ATM இயந்திரங்கள் மூலம் அபராதம் கட்ட நேரிடும் வங்கிகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து அந்த தொகையை பெற்றுக்கொள்ள முடியும். தவிர ATM இயந்திரங்களில் பணம் இருக்கிறதா என்பதை வங்கிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என RBI வலியுறுத்தியுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள், ATM இயந்திரங்களில் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: