இந்தியா

அரசு அலுவலகங்களில் சேவைகள் தாமதமானால் அபராதம், பணிநீக்கம் – ஹரியானா மாநில அரசு அதிரடி!!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், மக்களுக்கான சேவைகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்தால் அவர்களுக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக அரசு அலுவலகங்களில் ஒரு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு நெடு நாட்கள் ஆகும் என்றதொரு சூழல் நிலவி வருகிறது. முன்பெல்லாம் அரசுத்துறை அலுவலகங்களில் எழுத்து வேலை அதிகமாக இருப்பதால் பணிகளை முடிப்பதற்கு காலதாமதம் ஆகும் நிலை இருந்தது. ஆனால் தற்போதுள்ள அலுவலகங்கள் எல்லாம் கணினி மயமாக்கப்பட்ட பின்பும் அரசுத்துறை பணிகளில் சற்று தாமதம் ஏற்படத்தான் செய்கிறது. இந்த செயல்முறைகளை மாற்றும் விதமாக ஹரியானா மாநில அரசு ஒரு அற்புதமான யுக்தியை கையில் எடுத்துள்ளது.

அதாவது அரசு அலுவலகங்களில் ஏதாவதொரு பணியை செய்து முடிப்பதற்கு குறிப்பிட்ட காலத்தை தாண்டினால் அந்த அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், தேவை ஏற்பட்டால் அந்த ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹரியானா சேவை பெறும் உரிமை ஆணையத்தின் (RTSC) தலைமை ஆணையர் TC குப்தா கூறுகையில், ‘சேவை உரிமைச் சட்டத்தின் கீழ், குறிப்பிட்ட காலத்திற்குள் அறிவிக்கப்பட்ட சேவைகளை வழங்காத சுமார் 250 அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இனி வரும் நாட்களில் மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் தாமதம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அது அரசுத் துறைகளுக்கு பாடமாக இருக்கும். மேலும் பொது மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும்’ என குறிப்பிட்டுள்ளார். அதாவது பொது மக்களின் அனைத்து வேலைகளும் சரியான நேரத்தில் முடிக்கப்பட வேண்டும். மக்கள் அரசாங்கப் பணிகளில் திருப்தி அடைய வேண்டும் என்பதே ஆணையத்தின் குறிக்கோள் என்று அவர் விளக்கம் கொடுத்துள்ளார். இந்த அறிவிப்பு, ஹரியானா மாநில அரசின் 31 துறைகளின் 546 சேவைகளுக்கும் பொதுவானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அரசுப் பணியை தாமதப்படுத்தும் அதிகாரி அல்லது ஊழியருக்கு ரூ.20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் இந்த அபராத தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரி தனது சம்பளத்திலிருந்து செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு அரசு அதிகாரி அல்லது ஊழியருக்கு மூன்று முறைக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டால், அவரை இடைநீக்கம் செய்யவும் ஆணையம் பரிந்துரை செய்யும். இது தவிர, அரசின் சேவைகளில் தாமதம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு ரூ.5,000 வரை இழப்பீடு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  2 மணி நேரத்தில் காலியான டோக்கன்கள்..!
Back to top button
error: