இந்தியா

இந்திய வரலாற்றில் முதல்முறையாக காகிதமில்லா பட்ஜெட்!

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய நிதிநிலை அறிக்கை ஆவணங்களை அச்சிட வேண்டாம் என்று மத்திய நிதி அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. இதனால், பிப்ரவரி 1ஆம் தேதி காகிதமில்லா நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்படவுள்ளது.

சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக நிதிநிலை அறிக்கை ஆவணங்கள் அச்சிடப்படாமல் தாக்கல்செய்யப்படவுள்ளது. இந்த வரலாற்று நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிடமிருந்தும் அதற்கான அனுமதியை மத்திய அரசு பெற்றுள்ளதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கரோனா வைரஸ் அச்சங்களுக்கு மத்தியில் நிதிநிலை அறிக்கை அச்சிடும் செயல்முறைக்கு அலுவலர்கள் பலர் பதினைந்து நாள்கள் பதிப்பகத்தில் தங்க வேண்டியிருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கை ஆவணங்கள் பொதுவாக நிதி அமைச்சகத்தின் வடக்குப் பகுதியில் உள்ள அச்சகத்தில் அச்சிடப்படுகின்றன.

2021-22 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை நிகழ்வில் பல்வேறு மாறுதல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நிதிநிலை அறிக்கைக்கு முன்பு நடைபெறும் பாரம்பரிய ‘ஹல்வா’ விழாவும் இந்தாண்டு நடைபெறாது என்று கூறப்படுகிறது. பொதுவாக ஜனவரி 20ஆம் தேதி தொடங்கும் இந்த நிகழ்ச்சியில், நிதிநிலை அறிக்கை தயாரிப்பில் ஈடுபடும் அனைவரும் கலந்துகொள்வார்கள். இதன்பின், பட்ஜெட் அச்சிடும் பணி தொடங்கப்படும்.

அச்சிடுதல் தொடங்கியதும், நிதிநிலை அறிக்கை வழங்கும்வரை அச்சிடும் ஊழியர்கள் அனைவரும் பதிப்பகத்தில் தங்கி இருப்பார்கள். அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பு பாதுகாப்புப் படையினரால் நிர்வகிக்கப்படுகின்றன.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தலைமையில் நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்படும் பாரம்பரிய வழக்கத்தில் மாற்றம் ஏற்படுவது இது முதல் முறை அல்ல.

பட்ஜெட் ஆவணங்களைப் பெட்டியில் எடுத்துச் செல்லும் காலனித்துவ கால பாரம்பரியத்தை மாற்றிய நிர்மலா சீதாராமன், பட்ஜெட் ‘பாஹி கட்டா’ (சிவப்புத் துணியால் சுற்றப்பட்ட நிதிநிலை அறிக்கை ஆவணம்) முறையை அறிமுகப்படுத்தினார் என்பது நினைவுகூரத்தக்கது.

Back to top button
error: Content is protected !!