பொழுதுபோக்கு

பனீர் ஃபேன்டஸி தோசை செய்வது எப்படி..?

டெல்லி செங்கோட்டையில் செய்யப்படும் தோசைக்கல் பிரசித்தி பெற்றது. ஶ்ரீரங்கம் கோயில் பிராகாரக் கடைகளில் விற்கப்படும் தோசைக்கல்லும் முக்கியத்துவம் வாய்ந்தது. வார்ப்பு இரும்பு, அலுமினியம் ஆகியவற்றில் வட்டமாகவோ, குழியாகவோ (வாணலி மாதிரி) பாரம்பர்ய தோசைக்கல் செய்யப்படுகிறது. இவற்றில் தோசைகள் வார்ப்பது எளிது. இந்த பனீர் ஃபேன்டஸி தோசையை பாரம்பர்யமான தோசைக்கல்லில் செய்து பாருங்கள் சுவை கூடும்.

தேவையான பொருட்கள்

சிறுதானிய தோசை மாவு – 2 கரண்டி

பனீர் – 100 கிராம்

மயோனைஸ் – 2 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் (நறுக்கியது) – 20 கிராம்

பீட்சா சாஸ் – அரை டீஸ்பூன்

ஃப்ரெஷ் க்ரீம் – 100 மில்லி

ரெட் சட்னி – அரை கரண்டி

வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

தோசைக்கல்லில் 2 கரண்டி மாவை விட்டு தேய்த்துவிட்டு, பின்னர் அதன் மேல் நறுக்கி வைத்த வெங்காயத்தைச் சேர்க்கவும். பின்னர் மயோனைஸ் ஊற்றவும். தொடர்ந்து பீட்சா சாஸ், ரெட் சட்னி போட்டு அதன் மேல் சிறிதளவு கொத்தமல்லித்தழை தூவிவிடவும். பின்னர் கியூப் வடிவில் வெட்டி வைக்கப்பட்ட பனீரைப் போட்டு அதன் மேல் ஃப்ரெஷ் க்ரீம் ஊற்றி கரண்டி கொண்டு நன்கு கிளறிவிடவும். இறுதியாக வெண்ணெய் சேர்த்து தோசையின் மேல் தயாரான கிரேவியை தட்டில் வழித்து வைத்து பின் தோசையை தனியாக அதே தட்டில் வைத்துப்பரிமாறவும்.

தோசையை தேங்காய்ச் சட்னி மற்றும் புதினாச் சட்னியுடன் சேர்த்து சுவைக்க மிகவும் பிரமாதமாக இருக்கும்.

சிறுதானிய தோசை மாவு தயாரிக்க…

கேரள சிவப்பரிசியை தேவையான அளவு எடுத்து மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். சிறுதானிய வகைகளையும் மாவாக அரைத்து இரண்டையும் சரிபாதி விகிதத்தில் எடுத்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, தோசைக்கு மாவுக் கரைசலைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

மாவு அரைப்பது சிரமமாகத் தோன்றினால் சிவப்பரிசி மாவும் சிறுதானிய வகைகள் மாவும் இரண்டுமே கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி உப்பு, தண்ணீர் சேர்த்து தயார் செய்யலாம். இரவு தோசை ஊற்றப்போவதாக இருந்தால் காலையிலேயே மாவுக் கரைசலை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் புளிப்புத் தன்மை ஏற்பட்டு, தோசையின் சுவை பிரமாதமாக இருக்கும்.

ரெட் சட்னி தயாரிக்க…

கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடான வுடன் தேவையான அளவு பட்டை, லவங்கம் மற்றும் ஏலக்காயைச் சேர்த்து நன்கு வதக்கவும். பின் நறுக்கிவைத்த பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதங்கியதும் அதில் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பிறகு சிறிதளவு வெல்லம் மற்றும் சுவைக்கேற்ப புளி சேர்த்து கிளறி இறுதியாக காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி உப்பு சேர்த்து இறக்கினால் ரெட் சட்னி செய்வதற்கான மசாலா கலவை தயார்.

மிக்ஸியில் சட்னிக்குத் தேவையான அளவு பொட்டுக்கடலையைச் சேர்த்து அத்துடன் தயார் செய்துவைத்த மசாலா கலவையைக்கொட்டி அரைத்தெடுத்தால் வகை வகையான தோசைகளுடன் சேர்க்கும் ரெட் சட்னி தயார்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: