ஆன்மீகம்

பஞ்ச நந்திகளும் அதன் சிறப்புகளும்!!

போக (இந்திர) நந்தி: 

பார்வதியும் பரமேஸ்வரனும் பூவுலகம் செல்ல எண்ணினர். அப்போது இந்திரன், நந்தி வாகனமாகி அவர்களை பூவுலகம் அழைத்துச் சென்றான். இந்த நந்தியைப் போகநந்தி என்றும் இந்திர நந்தி என்றும் அழைக்கின்றனர். இந்த நந்தியை கோவிலுக்கு வெளியே கருவறையை நோக்கியவாறு அமைக்கின்றனர்.

பிரம்ம (வேத) நந்தி: 

பிரம்மன் படைப்புத் தொழிலை ஆரம்பிக்கும்முன் சிவனிடம் உபதேசம் பெற விரும்பினார். எனவே, நந்தி உருவுடன் சிவனைச் சுமந்து சென்றபடி உபதேசம் பெற்றுக் கொண்டார். நந்தி வடிவம் தாங்கியமையால் இந்த நந்தியை `வேத நந்தி’ , `வேத வெள்விடை’ , `பிரம்ம நந்தி’ என்று பல பெயர்களால் அழைக்கின்றனர். பிரம்ம நந்தி எனப்படும் இந்த நந்தியை சுதையினாலும் சுண்ணாம்புச் சாந்தினானும் மிகப்பெரிய அளவில் அமைக்கின்றனர்.

ஆன்ம நந்தி: 

பிரதோஷ கால பூஜையேற்கும் நந்திதான் ஆன்ம நந்தி. இது கொடிமரம் அருகே இருக்கும். எல்லா ஆன்மாக்களிலும் இறைவன் இருப்பதால், அந்த ஆன்மாக்களின் வடிவாக ஆன்ம நந்தி உள்ளது. இறைவனின் முதல்வன் விநாயகர். கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரர். எனவே தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக்கப்படுகிறது.

மால் விடை: 

மால் என்றால் மகாவிஷ்ணு; விடை என்றால் எருது. திரிபுராந்தகர் என்ற மூன்று அசுரர்களை அழிக்க சிவன் செல்லும்போது, மகாவிஷ்ணு நந்தியாகி அவரை சுமந்து சென்றார். மால்விடை எனப்படும் இது கொடி மரத்திற்கும் மகாமண்டபத்துக்கும் இடையில் அமைந்திருக்கும். இதனை `மால்விடை’ , `மால்வெள்விடை’ என்று பலவாறு அழைப்பர்.

தரும நந்தி:

மகா மண்டபத்தில் அமையும் சிறு நந்தியே தரும நந்தி என்பதாகும். இது கர்ப்பக் கிரகத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு மிக அருகில் இருக்கும். ஊழி முடிவில் உலக உயிர்கள் எல்லாம் உமாபதிக்குள் அடங்கிவிடும். அப்போது தர்மம் மட்டும் நிலைக்கும். அதுவே ரிஷபமாகிறது. இது தரும நந்தி.

பெரிய ஆலயங்களில் இத்தகைய ஐந்து நந்திகள் இருப்பதைக் காணலாம். திருவண்ணாமலை, காஞ்சிபுரம் முதலான தலங்களில் பஞ்ச நந்திகள் சிறப்புடன் போற்றப்பட்டு வருகின்றன.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: