தமிழ்நாடு

கூட்டணியில் நெருக்கடியும் இல்லை நெருடலும் இல்லை! – கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வரும் 14 ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று, காலை 11 மணிக்கு மதுரையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். ராகுலின் தமிழ் வணக்கம் எனும் பெயரில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.

தமிழர்களுடைய கலாச்சாரத்தை பார்வையிட மட்டுமே அவர் வருகிறார். தேர்தல் பரப்புரையில் ஈடுபடமாட்டார். அதற்கு பின்னர் தமிழகம் வரும் போது தான் தேர்தல் பணியில் ஈடுபடுவார். ஆகையால், இந்த வருகையின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ராகுல் சந்திக்கும் திட்டமில்லை.

தமிழகத்தில் மாபெரும் அளவில் பிரச்சாரம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட அதிகளவில் காங்கிரஸ் தலைவர்கள் இம்முறை பிரச்சாரம் செய்வர். ராகுல் வரும் போது மேற்கு, தெற்கு, டெல்டா மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்வார். தேர்தல் நெருங்கும் வேளையில் பிரியங்கா காந்தியையும் தமிழகத்திற்கு அழைப்போம்” என்றார்.

வெற்றி வாய்ப்புள்ள இடங்களை கூட்டணிக்கு ஒதுக்கக்கூடாது என்ற திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு பதிலளித்த அழகிரி, “கூட்டணி என்பது குடும்பப் பாசம், கொள்கை பாசம் கொண்டது. திமுக கூட்டணியில் நெருக்கடியும் இல்லை, நெருடலும் இல்லை. அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளரையே முடிவு செய்ய முடியவில்லை. எவ்வளவு தொகுதிகள் பெற வேண்டும் என எங்கள் குழுவும், திமுக குழுவும் இணைந்து முடிவு செய்யப்படும்” என்றார்.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால்தான் ராஷ்ட்ரிய ஜனதாதளம் தோல்வியுற்றது என்றும், இதனால் தமிழக தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு குறைவான இடங்களை கொடுக்க வேண்டுமென ஒரு சிலர் வலியுறுத்தி வருவது குறித்த கேள்விக்கு, “காங்கிரஸ் வாக்கு இல்லாமல் போயிருந்தால் பீகாரில் அத்தனை இடங்களில் ராஷ்டிரிய ஜனதா தளக் கூட்டணி வெற்றி பெற்றிருக்க முடியாது. தேஜஸ்வி யாதவ் இந்தளவுக்கு வெற்றி பெற காங்கிரஸ் கட்சிதான் காரணம்” என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.

Back to top button
error: Content is protected !!