ஆன்மீகம்

இறைவனை வழிபடும் ஒன்பது வழிமுறைகள்?

இறைவனை வழிபாடு செய்வதிலும் தனி மனிதர்கள் அனைவருக்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கிறது. ஒரு சிலர் தங்களது கஷ்டங்கள், துயரங்கள் நீங்க வேண்டி வழிபாடு செய்வர். சிலர் தங்களுக்கு கிடைத்த சந்தோஷமான வாழ்க்கைக்கு நன்றி சொல்வதற்காக வழிபாடு செய்வர். இன்னும் சிலர் நல்ல வேலை கிடைக்கவும், வாலிப வயதினர் நல்ல வரன் கிடைத்து திருமணம் நடைபெற வேண்டியும், குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டியும் இறைவனை வழிபடுகின்றனர். இவ்வாறு இறைவனை வழிபாடு செய்வதில் சில விதிமுறைகள் உள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எங்கே சிறப்பு

இறை வழிபாடு செய்வதை வீட்டிலும், கோயிலிலும் செய்யலாம் என்றாலும், சிலர் கோயிலுக்கு சென்று வழிபடுவதை கடமையாக வைத்திருப்பர். சிலர் வீட்டில் வணங்கினால் போதும் என்றிருப்பர்.

பெரும்பாலும் நாம் வீட்டில் வணங்கி வழிபடுவதை விட, வாரம் ஒருமுறையோ அல்லது எப்போதெல்லாம் கோயிலுக்கு செல்வதற்கு நேரம் கிடைக்குமோ, அப்போதெல்லாம் கோயிலுக்கு சென்று வழிபடுவதே சிறப்பாகும்.

எதற்காக

இறை சக்தியின் ஆற்றல் அனைத்தும் கோயிலில் தான் முழுமையாக நிறைந்திருக்கும். அபிஷேகம், ஆராதனை செய்யும்போது, அதன் சக்தி மூல விக்கிரகத்தில் இருந்து வெளிப்பட்டு நமக்கு கிடைக்கிறது.

அதனால் தான், கோயிலுக்கு சென்று வரும்போது ஒரு வகையான மனநிறைவு, ஆத்ம திருப்தி போன்றவை கிடைக்கிறது.

மேலும், நேர்மறை சக்தி அதிகளவில் ஒலி அலையாக காற்றில் மிதக்கும்போது, நமக்கு அத்தகைய ஆற்றல் கிடைக்கிறது. அதன் வாயிலாக, நமது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறுகிறது.

எத்தனை வகைகள்

இறைவனை வழிபாடு செய்வதில் கேட்டல், பாடுதல், நினைத்தல், திருவடிதொழல், பூஜித்தல், வணங்குதல், தொண்டு, சிநேகம் மற்றும் ஒப்படைத்தல் போன்ற ஒன்பது வகைகள் உள்ளன.

கேட்டல்

இந்த வழிபாட்டு முறைக்கு நாம் எதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

‘கற்றிலன் ஆயினும் கேட்க..’ என்றும், ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ என்றும் திருவள்ளுவர் கூறுவதை பின்பற்றினாலே போதுமானது.

இறைவனைப் பற்றிய பெருமைகளையும், புகழையும் கேட்டு, அவன் வசம் ஆகும் முறையே இந்த ‘கேட்டல்’ வழிபாட்டு முறை.

ஆகையால் இறைவனைப் பற்றி பலவற்றையும் அறிந்தவர்கள் சொல் வதைக் கேட்டால் போதும்.

கேட்பது என்பது எளிதல்ல, ஒருவர் சொல்வதை பொறுமையாக, தெளிவாக கேட்டு அறிந்து கொள்வதற்கும் மனம் ஒத்துழைக்க வேண்டும். அதனால் தான் வழிபாட்டு முறைகளில், ‘கேட்டல்’ முதலிடம் பெறுகிறது.

பாடுதல்

கேட்டல் வழிபாட்டிற்கு அடுத்தபடியாக இருப்பது, இறைவனைப் பாடி வழிபடும் முறை.

‘பாடும் பணியில் என்னை பணித்தருள்வாய்’ என்கிறார் குமரகுருபர சுவாமிகள். அந்த அளவுக்கு இறைவனை பாடும் வழிபாட்டு முறை சக்தி மிக்கதாக இருக்கிறது.

இதையும் படிங்க:  நாளை தொடங்கும் புரட்டாசியின் மகத்துவம்!

இசையால் இறைவனை ஈர்த்து, அவன் திருவடிகளை அடைந்தவர்களில் நால்வர் எனப்படும், அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் முக்கியமானவர்கள்.

பக்தியோடு இணைந்த பாடலுக்கு எப்போதும் மிகப்பெரிய சக்தி உண்டு. அத்தகைய பாடலின் வாயிலாக நாமும் இறைவனைப் பாடி அவனருளைப் பெறுவோம்.

நினைத்தல்

இறை வழிபாட்டில் மூன்றாவது நிலை, ‘நினைத்தல் ஆகும்’.

இறை சிந்தனையில் மூழ்குவது சாதாரணமாகத் தோன்றும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.

ஒரு விஷயத்தை நினைக்கும் போது, ஓராயிரம் சிந்தனைகள் வருகின்ற நிலையில், சில வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து இறைவனை நினைக்க முடிவதே பெரிய விஷயம்தான்.

அவ்வாறு இருக்கையில் எப்போதும், மனதில் இறைவனை நினைத்துக் கொண்டிருப்பது மேலான நிலையாகும்.

மனதைக் கட்டுப்படுத்தி இடைவிடாது இறைவனை நினைப்பது சாதனையாகும்.

திருவடிதொழல்

‘அறமாக விளங்கும் இறைவனின் திருவடிகளை வணங்குபவர்களைத் தவிர, மற்றவர்களால் பொருள், இன்பம் என்னும் பிறவிப்பெருங்கடலைக் கடக்க முடியாது’ என்பது திருவள்ளுவரின் வாக்கு.

நாம் கடந்து போக வேண்டிய இன்ப, துன்பங்கள் நிறைந்த இந்த வாழ்க்கைக் கடலில், நம்மை மூழ்கவிடாமல் காப்பது இறைவனின் திருவடிதொழுதல் மட்டும் தான்.

எந்த நிலையில் எப்படிப்பட்ட துன்பங்கள் வந்தபோதிலும், இறைவனையே தொழுது பேறு பெற்ற நாயன்மார்கள் இதற்குச் சான்றாக விளங்குகிறார்கள்.

பூஜித்தல்

இறைவனை பூஜை, நைவேத்தியம் செய்து வழிபடும் முறை.

இறைவனை இப்படித்தான் பூஜித்து வழிபட வேண்டும் என்று ஆகம விதிகளும், வழிபாட்டு முறைகளையும் வகுத்து வைத்திருந்தாலும், எப்படி பூஜித்தாலும் அந்த வழிபாட்டில் பக்தியும், அன்பும் இருந்தால் இறைவன் மனமுவந்து அதை ஏற்றுக்கொள்வான்.

ஆகம விதிப்படி பூஜைகளை செய்து வந்தவர்கள் மத்தியில், இறைவன் மீதான அன்பால் அவருக்கு பன்றி இறைச்சியையும், தன் கண்ணையும் கொடுத்ததின் மூலமாக இறைவனை பூஜிப்பதற்கு அன்பு ஒன்றே போதும் என்று நிரூபணம் செய்தவர் கண்ணப்ப நாயனார்.

வணங்குதல்

பூஜித்தல், வணங்குதல், திருவடிதொழல் ஆகிய மூன்று வழிபாட்டுக்கும் மிக நுண்ணிய வித்தியாசமே உண்டு.

‘வணங்குதல்’ என்ற வழிபாட்டு முறையை ‘தலைவணங்குதல்’ என்று எடுத்துக்கொள்வதே சரியாக இருக்கும்.

திருவடிதொழல் மற்றும் பூஜித்தலில் பக்தி முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் வணங்குதலில் அகங்காரத்தை களைவது என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.

‘நான்’ என்ற ஆணவம் தான் அனைத்துக்கும் மூலகாரணம். அந்த ‘நான்’ என்ற அகந்தையை ஒழித்து, ‘எல்லாம் நீ’ என்ற பணிவுடன் இறைவனை தலைவணங்கும் முறை இது.

‘நான்’ என்னும் அகங்காரத்தை கைவிட்டால் ஒழிய, இறைவனின் அருள் நமக்கு கிடைக்க வழியே இல்லை என்பதைச் சொல்வதே இந்த வழிபாட்டின் சிறப்பம்சம்.

தொண்டு

இதையும் படிங்க:  வீடு கட்டும் முன் பூமி பூஜை போடுவது ஏன்? பலன்?

தன்னலம் கருதாது, புகழுக்காகவும், லாபத்திற்காகவும் அல்லாது, இறைவனுக்கும், இறைவன் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் இயலாதவர்களுக் கும் தொண்டு செய்வதும் கூட இறைவனை வழிபடும் ஒரு மார்க்கமாகவே பார்க்கப்படுகிறது.

தன்னலமற்ற தொண்டுக்கு சிறந்த உதாரணமாக ஆன்மிக தொண்டாற்றிய திருநாவுக்கரசரையும், சமூக தொண்டாற்றிய அன்னை தெரசாவையும் குறிப்பிடலாம்.

சிநேகம்

இறைவனை சிநேகத்துடனும் பார்ப்பது ஆன்மிகத்தின் தனிச்சிறப்பு தன்மையாகும்.

சிவபெருமானுடன், சுந்தரர் நட்பு கொண்டு வழிபடுவது இத்தகைய வழிபாட்டு முறையாகும்.

இதைத்தான் ‘அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே’ என்கிறார் வள்ளலார் என்னும் ராமலிங்க அடிகளார்.

ஒப்படைத்தல்

உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பனம் செய்வது இதன் சிறப்பம்சம்.

இது ஆன்மிகத்தின் உச்சநிலையாகக் கருதப்படுகிறது.

இறைவனை அடையவும், அவனது பேரருளைப் பெறவும் இந்த ஒன்பது வகைகளில் அவரவர் இயல்புக்கு ஏற்ற வழியைத் தேர்ந்தெடுத்து அதை கடைபிடிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: