
நாடு முழுவதும் இதுவரை 9 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பெருமிதம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அசுர வேகத்தில் வீசி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. புகாரை மறுத்துள்ள மத்திய அரசு, போதுமான அளவு தடுப்பூசி டோஸ்கள் கைவசம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், நாடு முழுவதும் இதுவரை 9 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 16-ம் தேதி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில், 3 மாதங்கள் கூட நிறைவு பெறாத சூழலில் 9 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி பணிகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இம்மாதம் முழுவதும் விடுமுறை தினங்கள் உள்பட அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார் மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.