
சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை இன்று (ஜன.27) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் திறந்து வைக்கின்றனர்.
இந்நிலையில், ஏறக்குறைய 1500 தொண்டர்களை அமைச்சர் செல்லூர் ராஜு தனி ரயிலில் சென்னைக்கு அழைத்துச் சென்றார். இந்நிகழ்ச்சி முடிந்ததும் இன்று மாலை 5 மணிக்கு தொண்டர்கள் மதுரைக்கு திரும்பவும் அமைச்சர் தனி ரயிலில் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது, “எந்த ஒரு அரசியல் இயக்கமும் தலைவரின் நிகழ்ச்சிக்கு இதுபோன்று ரயிலில் பதிவு செய்து சென்றதாக வரலாறு இல்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவர் குணமடைந்து வர வேண்டி பால்குடம் போன்றவை எடுத்து பிரார்த்தனை செய்தோம். தற்போது அவர் உயிருடன் இல்லை. ஆனால் ஜெயலலிதாவின் நினைவிடத்தை உலகமே வியக்கும் வண்ணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்டிக்கொடுத்துள்ளார்.
மதுரையிலிருந்து 50 பேருந்துகள், கார்கள், சிறப்பு தனி ரயில் மூலம் 10,000 பேர் சென்னைக்கு செல்கிறோம். நானும் பேரன்களோடு ரயிலில் பயணம் செய்கிறேன். எனது சொந்த செலவில் முன்பதிவு செய்தேன். இந்த ரயில் பயணத்தை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது” என்றார்.
ரயிலில் தொண்டர்களை அழைத்து செல்ல எப்படி யோசனை வந்தது? என செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “மதுரைக்காரன் எதை செய்தாலும் வித்தியாசமாக செய்வான், ஆழமாக செய்வான், ஆரோக்கியமாக செய்வான்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.