ஆரோக்கியம்

மருத்துவக் குணம் நிறைந்த நெருஞ்சில்!

நெருஞ்சில் அல்லது நெருஞ்சி என்று அழைக்கப்படும் இந்த மூலிகையின் தாவரவியல் பெயர் Tribulus terrestris.

அசுவத்தம், உச்சிகம், உசரிதம், திரிகண்டம், கோகண்டம், அசுவசட்டிரம், காமரதி, சாம்பம், செப்பு என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.

மருத்துவ மூலிகையான இதில், சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில், பெரு நெருஞ்சில் என பல வகைகள் உள்ளன.

இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் நிறைந்த நெருஞ்சிலின் இலை, பூ, காய், வேர் அனைத்துமே மருத்துவக் குணம் நிறைந்தவை.

சிறு நெருஞ்சில்

மஞ்சள் நிற மலர்களையுடையது சிறு நெருஞ்சில். இதன் பூக்கள், சூரியன் இருக்கும் திசைநோக்கித் திரும்பும் தன்மையுடையவை. காய் முற்றும்போது முள்ளுடன் இருக்கும். சிறு நெருஞ்சில் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தக்கூடியது.

இதன் வேரை எலுமிச்சைப் பழத்தின் சாறு விட்டு அரைத்துக் குடித்து வந்தால் உரிய வயதில் பூப்பெய்தாத பெண்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

நெருஞ்சில் இலைகள் 50 கிராம் எடுத்து, அரை லிட்டர் தண்ணீர் விட்டுப் பாதியாகும் அளவு காய்ச்சி தினமும் காலையில் அருந்தி வந்தால் பெண்களின் கர்ப்பப்பைக் கோளாறுகள் நீங்குவதுடன் குழந்தைப்பேறு உண்டாகும்.

நெருஞ்சில் செடியை நிழலில் உலர்த்திச் சூரணம் செய்து இரண்டு கிராம் அளவு, பாலுடன் கலந்து காலை மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் வெட்டை நோய் குணமாகும்.

நெருஞ்சில் முள்ளைப் பசும்பாலில் வேகவைத்து உலர்த்திப் பொடியாக்கி இரண்டு கிராம் அளவு எடுத்துப் பாலுடன் சேர்த்து காலை மாலை இரண்டுவேளை குடித்து வந்தால் உடல் பலம் பெறுவதுடன் தாம்பத்யப் பிரச்னைகள் தீரும்.

இதன் இலையை வெள்ளாட்டுப் பாலுடன் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டித் தேன் சேர்த்துக் குடித்து வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

நெருஞ்சில் முள்ளை தண்ணீர் விட்டுக் கஷாயமாக்கிக் குடித்து வந்தால் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் குணமாகும். குறிப்பாக, சிறுநீரகக் கல்லைக் கரைத்து சிறுநீர் தடையின்றி போகச் செய்யும். கர்ப்பிணிகளுக்கு வரும் சிறுநீர்ப் பிரச்னையையும் இது குணமாக்கும்.

செப்பு நெருஞ்சில்

புல் தரையில் தரையோடு தரையாகப் படர்ந்து வளரும் கொடி வகை இது. இதன் பூக்கள் ரோஜாப்பூவின் நிறத்தில் இருக்கும். இதன் இலைகளைக் கஷாயமாக்கிக் குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.

வேர் புழுக்கொல்லியாகச் செயல்படும். முழுச் செடியையும் கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள், பித்தப்பைக் கற்களை வெளியே தள்ளும் தன்மை கொண்டது.

பெரு நெருஞ்சில்

இதை யானை நெருஞ்சில் அல்லது யானை வணங்கி என்று சொல்வார்கள். மற்ற நெருஞ்சில்களைவிட இதன் இலைகள் அகலமாகவும் பெரிதாகவும் காணப்படும்.

இதன் இலைகளைத் தண்ணீரில் போட்டால் சிறிது நேரத்தில் தண்ணீர் கொழகொழப்புத் தன்மையுடன் எண்ணெய் போல ஆகிவிடும் இது ஆண்மைக்குறைவைச் சரி செய்யும்.

மேலும் இதன் இலைகள் உடல் சூட்டை தணிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: