
பத்து மாதங்களுக்கு பிறகு கேரளாவில் நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. முதல் படமாக விஜயின் மாஸ்டர் படம் திரையிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் மாஸ்டர்:
கேரளாவில் கொரோனா ஊரடங்கால் பத்து மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிட்டு நாளை முதல் திறக்கப்படவிருக்கின்றன. தமிழகத்தை போலவே 50% பார்வையாளர்களுடன் படங்களை திரையிட திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் படமாக எந்த ஒரு மலையாள படமும் வெளியாகாத நிலையில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கேரள மாநிலம் முழுவதும் 350 திரையரங்குகளில் திரையிடப்பட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரிலீசுக்காக காத்திருக்கும் மலையாள படங்களின் எண்ணிக்கை மட்டும் 80 ஆக இருக்கும் நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள “ஒன்” திரைப்படமும் தற்போது வெளியிடப்படப் போவதில்லை. திரையரங்குகளில் மாஸ்டர் படத்திற்கு கிடைக்கவிருக்கும் வரவேற்பை பொறுத்துதான் மலையாள படங்கள் அடுத்த மாதம் முதல் ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என தெரிகிறது. இதனால் எந்த போட்டியுமின்றி மாஸ்டர் படம் கேரளாவில் தனித்து திரையிடப்படுகிறது. அடுத்த 3 வாரங்களுக்கு கேரளாவில் மாஸ்டரின் ஆட்சிதான்.
பொதுவாகவே கேரளாவில் விஜய் படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெரும் என்பதால் இந்த படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் பல மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்படுவதால் கேரள அரசு ஜனவரி முதல் மார்ச் வரை கேளிக்கை கட்டணத்தை ரத்து செய்தல், திரையரங்குகளிடம் 50% மின்கட்டணம் மட்டுமே வசூலித்தல் போன்ற சலுகைகளை வழங்கியுள்ளது. இது படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.