தமிழ்நாடுமாவட்டம்

சீமானுக்கு அனுமதி மறுப்பு: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், பழனியில் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த வேல் நடைபயணத்திற்கு அனுமதி மறுத்து மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழர் நிலத்தின் கடவுள் என்று முருகனை கொண்டாடி வருபவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தற்போது தமிழக பாஜக வேல் யாத்திரையை மேற்கொண்டு வருகிறது. இந்த யாத்திரைக்கு எதிர்க்கட்சிகள் போலவே சீமானும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அயோத்தியில் ராமரை வைத்து அரசியல் செய்ததுபோல, கேரளாவில் ஐயப்பனை வைத்து அரசியல் செய்யலாம் என்று முயற்சி பண்ணினாங்க. தோத்து போய்ட்டாங்க.

இப்போ தமிழ்நாட்டில் முருகனைக் கையிலெடுக்கிறார்கள். இத்தனை வருஷமா முருகனை தொடாமல், இப்போ ஏன் கையிலெடுக்கிறார்கள் தெரியுமா.

இவங்க என்னதான் வேல் எடுத்து அரோகரா போட்டாலும், “வெற்றி வேல், வீர வேல்” என்று கத்தினாலும், “முருகா” என்று சொன்னாலே இந்த சீமான் முகம்தான் ஞாபகத்துக்கு வரும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், சீமான் தலைமையில் பழனியில் நாளை வேல் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த வேல் நடைபயணத்திற்கு, பழனி எஸ்பி அலுவலகம் அனுமதி மறுத்தது.

இதனால் இதை எதிர்த்து கஜா என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளதால் நடைபயணத்துக்கு அனுமதி தர முடியாது என்று திண்டுக்கல் மாவட்ட எஸ்பி தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, நாம் தமிழர் கட்சியின் வேல் நடைபயணத்திற்கு அனுமதி வழங்கமுடியாது என உறுதியாக தெரிவித்துவிட்டதுடன், இந்த வழக்கை ஜனவரி மாதத்திற்கும் ஒத்திவைத்தார்.

loading...
Back to top button
error: Content is protected !!