ஆன்மீகம்

கிழமைக்கான தீபங்களும் தீரும் பிரச்சனைகளும்!

தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது என்று காலம், காலமாக நம் முன்னோர்கள் நமக்கு தெரிவித்து சென்றுள்ளனர். அதையடுத்து, வீட்டில் எந்த விஷேசம் நடந்தாலும் விளக்கேற்றி செய்வதுதான் தமிழக மக்களின் பழக்கமாகும். அதேபோல், புதிதாக திருமணம் முடிந்து வீட்டிற்கு வரும் மருமகளையும் முதலில் விளக்கு ஏற்ற சொல்லுவது வழக்கமாக உள்ளது. அத்தகைய மகத்தான விளக்கின் தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் `தீபலட்சுமியே நமோ நம’ என்று கூறி வணங்குவது அவசியம். இந்நிலையில், எதற்காக தீபம் ஏற்ற வேண்டும், என்ன மந்திரம் கூறி வழிபட வேண்டும்? எதற்காக வழிபடனும்? எந்த கிழமைக்கு என்ன பிரச்சனை தீரும்? என்பது குறித்து பார்க்கலாம்.

தீபம் ஏற்றுவதன் அவசியம்

நமது ஆன்மிகக் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்த தீபவழிபாட்டை, காலை, மாலை இரண்டு வேளைகளில் வீட்டில் தீபம் ஏற்றிவைத்து அதற்கு நமஸ்காரம் செய்து வழிபடும்போது, தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

நம்மை காக்கும் தெய்வத்திற்கு நன்றி சொல்லும் விதமாகவே விழாக்கள் எடுக்கப்படுகின்றன.

அதேபோல், வீட்டில், கோயில்களில் ஏற்றப்படும் தீபத்தைச் சிறப்பிக்கும் மாதமாக திருக்கார்த்திகை மாதம் திகழ்கிறது.

இந்த மாதத்தில் அனைத்து நாட்களிலும் திரு விளக்கேற்றி வழிபடுவது விசேஷம். முடியாவிட்டால், கார்த்திகை மாதம் வருகின்ற பரணி, கார்த்திகை, ரோஹிணி ஆகிய மூன்று நட்சத்திர நாட்கள் மட்டுமாவது வீட்டில் அல்லது கோயிலில் அவசியம் தீபம் ஏற்ற வேண்டும்.

தீப ஜோதியே நமோ நம :

சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தன சம்பதா

சத்புத்தி ப்ரகாசாய தீப ஜ்யோதிர் நமோநம:

தீபம் ஏற்றுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனசேர்த்தி, நல்லபுத்தி ஆகியவை கிடைக்கும்.

எதற்காக வழிபாடு

ஒருவருக்கு எத்தகைய தோஷங்கள் ஏற்பட்டிருந்தாலும், அதன் மூலமாக வருகின்ற துன்பங்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு எளிய, சக்தி வாய்ந்த பரிகாரங்களை, வேதகால மகரிஷிகள் அருளியுள்ளனர்.

அத்தகைய பரிகாரங்களில், முதன்மை பெற்று விளங்குவது, திருக்கோயில்களிலும், மகான்களின் பிருந்தா வனங்களிலும் தினமும் அல்லது குறிப்பிட்ட கிழமைகளிலும் நெய் தீபம் ஏற்றி வருவதேயாகும்.

வசதியற்றவர்கள், நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம்.

எத்தனை நாள்

பரிகாரங்களுக்காக ஏற்றப்படும் தீபங்களின் எண்ணிக்கை அதன் பரிகாரத்திற்கேற்ப மாறுபடும்.

அதேபோல், தீபங்களை ஒற்றைப்படை அடிப்படையில் ஏற்றுவதுடன், குறைந்தபட்சம் 3, 5, 11 என்ற நாட்களில் ஏற்றும்போது நல்ல பலனை கொடுக்கும்.

நெய் தீபம் ஏற்றும் பரிகார முறையில் பல ரகசியங்களும், சூட்சுமங்களும் உள்ளன.

நெய் தீபம் ஏற்றுவதால் உடனுக்குடன், தவறாது பலன் கிடைக்கும்.

இந்தப் பரிகாரத்தின் மகத்தான சக்தியை அனுபவத்தில் பார்க்கலாம்.

என்ன பலன்கள்

ஞாயிறுக்கிழமை தீபம் ஏற்றுவதால், இதயம், வயிறு, இரத்தம், நரம்பு சம்பந்தமான நோய்கள், நாத்திக எண்ணங்கள், தெய்வ நிந்தனை, பெரியோர்களை எதிர்த்து வாக்குவாதம், பித்ரு பூஜைகளை விட்டுவிடுவதால் ஏற்படும் துன்பங்கள் ஆகியவை விலகும்.

திங்கட்கிழமை தீபம் ஏற்றுவதால், மனக் கவலை, மனோவியாதி, நிம்மதியின்மை, பயம், தாழ்வு மனப்பான்மை, குழந்தைகளுக்கு ஏற்படும் குறை, வெள்ளைப்புள்ளிகள் போன்ற சருமநோய்கள் ஆகியவை விலகும்.

செவ்வாய் கிழமை தீபம் ஏற்றுவதால், பெண்களுக்குத் திருமணம் தடைப்படுதல், செவ்வாய் தோஷம், முன்கோபம், அவசர புத்தி, பிடிவாதம், வார்த்தைகளால் பிறர் மனதைப் புண்படுத்துவது, ஜாதகத்தில் கேதுவினால் ஏற்படும் தோஷங்கள் ஆகியவை விலகும்.

புதன் கிழமை தீபம் ஏற்றுவதால், படிப்பில் தடை, ஞாபக மறதி, பாடங்களில் ஆர்வமின்மை, மாணவர்களுக்கு சகவாச தோஷம், தீராத நோய்கள் ஆகியவை விலகும்.

வியாழக்கிழமை தீபம் ஏற்றுவதால், ஆண்களுக்கு விவாகம் தடைபடுவது, குடும்பத்தில் மகிழ்ச்சியின்மை, புத்திர பாக்கியம், தெய்வத்திடம் நம்பிக்கையின்மை, ஆச்சார்யர், குரு ஆகியோருக்குத் துரோகம் இழைத்தல், பெரியோர்களை அவமதிப்பது, குழந்தைகளால் பிரச்சனை ஆகியவை விலகும்.

வெள்ளிக்கிழமை தீபம் ஏற்றுவதால், கணவன், மனைவி நெருக்கம் பாதிக்கப்படுதல், கடன் தொல்லைகள், மாங்கல்ய பலத்திற்குச் சோதனை, பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்படும் மனவேதனைகள், பண விரயம் போன்றவைகள் நீங்கும்.

சனிக்கிழமை தீபம் ஏற்றுவதால், ஆயுள், ஆரோக்கியம், தீராத நோய்கள், தொழில் பிரச்சனைகள், பில்லி, சூனியம், செய்வினை தோஷங்கள், வேலையில் நிரந்தரமின்மை, ஜாதகத்தில் ராகுவினால் ஏற்படும் தோஷங்கள் போன்றவை விலகும்.

ராகுவினால் ஏற்படும் தோஷங்களுக்கு சனிக்கிழமையும், கேதுவினால் ஏற்படும் தோஷங்களுக்குச் செவ்வாய்க்கிழமையும் தீபம் ஏற்றி வழிபடுவது விசேஷ நன்மைகளைத் தரும்.

அவசியமானது

தீபத்தை தரையில் வைக்கக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கு என்றால், ஒரு பித்தளை தட்டு அல்லது தாமிரம் அல்லது பஞ்சலோகத் தட்டில் அரிசி, துவரை, உளுந்து, மஞ்சள் கிழங்கு வைத்து, அதன் மேல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும்.

குத்து விளக்கு என்றால், ஒரு சிறிய வாழை இலையில் அரிசி வைத்து, அதன்மேல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும்.

விளக்கை பந்தம் போல புகை வரும்படி எரிய விடக்கூடாது.

கடலை எண்ணெய்யில் விளக்கு ஏற்றுவது மகா பாவம். இதனால் வீட்டில் வம்ச விருத்தி இருக்காது.

தெற்கு திசை தவிர்த்து மற்ற எந்த திசையிலும் தீப முகம் இருக்கலாம்.

வீட்டில் பெண்கள் மட்டுமே விளக்கு ஏற்றுவது சிறப்பு.

திருமணம் ஆன பெண் விளக்கேற்றும் போது, வளையல், மெட்டி, புருவ மத்தியில் குங்குமம், நெற்றியின் வகிட்டில் குங்குமம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

தீபம் ஏற்றுவதற்கு முன்பு விளக்கை மஞ்சள், குங்குமம், சந்தனம், உடன் பூ சாற்றி அலங்காரம் செய்திருப்பது அவசியம்.

தீபம் ஏற்றும் போது கணபதி, லட்சுமி, சரஸ்வதி,குலதெய்வம், இஷ்டதெய்வங்களை நினைத்துக்கொண்டே விளக்கேற்றுவது கூடுதல் பலனை கொடுக்கும்.

விளக்கை அணைக்கும்போது, வாயால் ஊதி அணைக்கக்கூடாது. மலர்களை கொண்டே அணைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: