ஆன்மீகம்

அறியுங்கள் வைகுண்ட ஏகாதசியின் சிறப்புக்களை!

ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்பது இவ்விரதம் பற்றிய பழமொழியாகும். அந்த வகையில் ஏகாதசி திருமாலுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது.

மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது இருபத்தைந்தாவது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. வைகுண்ட ஏகாதசியன்று, திருவரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. காலப்போக்கில், வைணவக் கோயில்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பது ஒரு திருவிழாவாகவே நடைபெறுகிறது.

பொதுவாக, ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். இதுப் பொது விதி.

இந்துக்கள் ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் உண்ணா நோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவச் செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும் என நம்புகின்றனர். விஷ்ணுபுராணம் என்ற நூலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் உண்ணாநோன்பு இருந்த பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒரு நாள் விரதத்தால் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்நாள் சிறப்பினைப் பெறுகிறது.

வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு : மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.

வைகுண்ட ஏகாதசியில், சொர்க்கவாசல் திறப்பு என்பது முக்கிய நிகழ்சியாகும். மனிதராய் பிறந்த நாம்… யாருக்கும் தீமை நினைக்காமல் எல்லா உயிர்களுக்கும் நன்மையே நினைத்தால் நம்மை அந்த பரந்தாமனே வைகுண்டத்திற்கு அழைத்து செல்வார் என்பதன் தத்துவத்தை உணர்த்தவே வைகுண்ட ஏகாதசி நாளில் பெருமாள் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று துளசி நீரினை மட்டும் உட்கொண்டு பகல் மற்றும் இரவு வழித்திருந்து திருமால் பற்றிய பாடல்கள் பாடி விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரத வழிபாடு வைகுந்த பதவி என்னும் மோட்சத்தை நல்கும் என்று கருதப்படுகிறது.

மகாபாரதத்தில் குருச்சேத்திரப் போரின் துவக்கத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அருச்சுனனுக்கு இந்த நாளில் தான் பகவத் கீதை விளக்கங்களை நிகழ்த்தியதாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க:  இன்றைய ராசிபலன் (20-11-2021)

வைகுண்ட ஏகாதசி விழா பெருமாள் ஆலயங்களில் இருபது நாட்கள் திருவிழாவாக சிறப்பாக நடைபெறுகிறது. பகல் பத்து என பத்து நாட்களும், ராப்பத்து என பத்து நாட்களும் திருவிழா நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்து நாட்களை பகல் பத்து என்றும், வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் பத்து நாட்களை ராப்பத்து நாட்களாகவும் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

வைகுண்ட ஏகாதசி அன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. பெருமாளின் பாதத்தில் போய் சேர்ந்து விட்டார், என்பதற்கு வேறு காரணம் உண்டு. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி என்பர். வைகுண்ட ஏகாதசி திதி நாட்களில் தாய், தந்தைக்கு நினைவு நாள் வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல் நாளே பறித்து வைத்து விட வேண்டும்.

வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருக்கும் முறை : வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் திலகம் இட்டு… துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும். காலை 3 மணிக்கு பக்திப் பாடல்களை பாட வேண்டும். 3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்து விட வேண்டும். அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை. இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் விரதம் இருக்க வேண்டும். மறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். காலையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர் என்பது ஒரு நம்பிக்கை.

ஸ்ரீ ரங்கமும் – அரையர் சேவையும் : வைகுண்டத்தை திருநாடு என்று தமிழில் குறிப்பிடுவர். அத்திருநாட்டிற்குச் செல்பவர்கள் எப்போதும் பெருமாளைத் தரிசிக்கும் பாக்கியம் பெறுவர். அவர்களுக்கு நித்யசூரிகள் என்று பெயர். இவர்களுக்கு பசி, தாகம், உறக்கம் என்னும் எவ்வித உணர்வும் இருக்காது. பேரானந்தத்தில் மூழ்கி இருப்பர். பரசவநிலையில் பெருமாளை புகழ்ந்து ஆடிப்பாடுவர். இக்காட்சியைப் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்திலும் நிகழ்த்த வேண்டும் என்ற ஆவல் நாதமுனிகளின் உள்ளத்தில் எழுந்தது. அரையர் என்னும் அபிநயத்தோடு ஆடும் கலைஞர்களை உருவாக்கினார். இதுவே அரையர் சேவை என்று இன்றும் கூட வழங்கப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் அரையர் சேவை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.

இதையும் படிங்க:  இன்றைய ராசிபலன் (21-11-2021)

அரையர் சேவைக்கென்று தனி உடை, பிற அலங்காரம் எதுவும் செய்து கொள்வதில்லை. கூம்பு வடிவ குல்லா ஒன்றை தலையில் அணிந்து கொண்டு பெருமாளுக்கு சூடிக்களைந்த மாலை, பரிவட்டம் ஆகியவற்றை மட்டும் அணிந்து கொண்டு அபிநயம் செய்வர். பாசுரங்களை பாடும்போது, அதற்கேற்ப முகம், கை பாவம் காட்டி அரையர் நடிப்பர். அரையர் சேவையில் முத்துக்குறி என்னும் பகுதி உண்டு. குறிசொல்லும் ஒரு பெண்ணிடம், தாய் தன் மகளின் எதிர்காலம் குறித்து கேட்பதே முத்துக்குறி. முத்துக்குறியைக் காண வரும் ஆண்களும், பெண்களும் பட்டு உடுத்தி வருவது மரபு. அன்று அரையர் ஒருவர் பட்டு உடுத்தி, தாயாக, மகளாக, குறிசொல்பவளாக மாறி மாறி அபிநயத்தோடு பாடி ஆடுவது சிறப்பு. தமிழகத்தில் ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் ஆகிய மூன்று திவ்ய தேசங்களில் மட்டும் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அரையர் சேவை நடக்கிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்துநாட்களை பகல் பத்து என்றும், (மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் தசமி வரை) வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் பத்து நாட்களை (ஏகாதசி முதல் பஞ்சமி வரை) ராப்பத்து நாட்களாகவும் கொள்வர்.

வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்தால் எல்லை அற்ற நற்பலன்கள் ஏற்படும்.. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்..

1. வாழ்வில் முன்னேற்றம் உண்டு.

2. தனம், தானியம் போன்ற இவற்றுக்கு குறை இருக்காது.

3. வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு மோக்ஷம் சித்திக்கும்.

4. மனத்தூமை, உள்ளத்தூய்மை என இவை இரண்டுமே சித்திக்கும்.

5. மனம் பரிசுத்தம் அடையும்.

6. ஊழ்வினைகள் அகலும்.

7. எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விலகும்.

8. கிரக தோஷங்கள் தீரும்.

9. ஆயுள் கூடும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: