ஆன்மீகம்

திருவண்ணாமலை கிரிவலம் பற்றி அறிந்ததும், அறியாத தகவலும்!

கிரி வலம் என்றாலே நமது நினைவிற்கு வருவது “திருவண்ணாமலை” கிரிவலம் தான். ஆனால், இன்னும் பல ஊர்களில் திருவண்ணாமலை போன்றே பல சிறப்பு மிக்க மலைகளை பக்தர்கள் கிரிவலம் செய்கின்றனர். கிரி என்றால் மலை; வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவது கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது.

கிரி வலம் என்றவுடன் ஏன் பெரும்பாலும் தமிழகத்தில் உள்ளவர்களுக்குத் ‘திருவண்ணாமலை’ நினைவிற்கு வருகிறது. இதற்குக் காரணம், திருவண்ணாமலையில் ஒரு காலத்தில் சித்தர்கள் நடமாடியதாக சொல்லப்படுகிறது. அங்கு பல சித்தர்களின் ஜீவ சமாதிகள் இருப்பதாகவும் கூட சொல்லப்படுகிறது. இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி மலையைச் சுற்றி வருவதால் இறை அருளும் மகான்களின் ஆசியும் பக்தர்கள் பெறுகின்றனர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருவண்ணாமலை அருணாச்சல மலையின் அமைப்பு : அருணாச்சல மலையானது 2668 அடி உயரத்துடனும் 14 கிலோமீட்டர் சுற்றளவுடன் காட்சியளிக்கிறது. மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.

அவைகள், இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகிய இவையே அந்த எட்டு லிங்கங்கள் ஆகும். இந்த எட்டு லிங்கங்களை வழிபடுவது விசேஷித்த பலனைத் தர வல்லது.

இவை தவிர, ரமணமகரிசி, சேசாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் போன்றோர் சமாதிகள் அமைந்துள்ளன. திருவண்ணாமலையை எல்லா நாட்களிலும் மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் முழு நிலவு நாளில் வலம் வருதல் சிறப்பாக கருதப்படுகிறது. இம்மலையானது யுகங்களின் அழிவுகளிலும் அழியாமல் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறியிருப்பதாக நம்பப்படுகிறது. எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது. இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு. மலையை வளம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம். கிரிவலம் செல்லும்போது பஞ்சாச்சர நாமத்தையோ( நமசிவாய,சிவாயநம) அல்லது திருமுறைகளையோ ( தேவாரம், திருவாசம்……) உச்சரிக்க வேண்டும் , அதை தவிர்த்து வேற எதையும் பேசுதல் பாவத்தை தந்து விடும்.

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும்போது நிதானமாக நடக்க வேண்டும், அவசரமாகவோ, வேகமாகவோ அல்லது மற்றவர்களை இடித்து கொண்டுச் செல்லக் கூடாது. மலைவலப்பாதையில் அஷ்டலிங்கங்கள், நந்திகள், 300 க்கும் மேற்பட்ட குலங்கள் மனதிற்கு ரம்யமாய் அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:  கும்ப ராசியை ஜட ராசி என்று ஏன் சொல்கிறோம்?

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: