இந்தியா

ஊதிய உயர்வு கோரி 2-வது நாளாக கர்நாடக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்..!

கர்நாடகாவில் ஊதிய உயர்வு கோரிக்‍கையை வலியுறுத்தி, அரசு போக்‍குவரத்து ஊழியர்கள் நடத்திவரும் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக இன்றும் தொடர்கிறது. அரசு பேருந்துகள் இயங்காததால் ப‌யணிகள் கடும் அவதிக்‍கு ஆளாகியுள்ளனர்.

கர்நாடகாவில் அரசு போக்‍குவரத்து ஊழியர்கள், 6-வது ஊதிய குழு பரிந்துரைப்படி, தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும், தங்களை அரசு ஊழியர்களாக கருத வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு டிசம்பரில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, போக்குவரத்து கழக ஊழியர்களை நேரடியாக அரசு ஊழியர்களாக மாற்றம் செய்யும் கோரிக்கையை தவிர, மற்ற அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக சமாதானம் செய்த கர்நாடக அரசு, இதுவரை நடவடிக்‍கை எடுக்‍கவில்லை.

இந்நிலையில், தங்களது கோரிக்‍கைகளை உடனடியாக நிறைவேற்றக்‍கோரி கர்நாடக அரசு போக்‍குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். சில தொழிலாளர்கள் மட்டும் பணிக்கு வந்தனர். போராட்டத்திற்கு தங்கள் ஆதரவு உள்ளதாகவும், ஆனால் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்‍க பணிக்‍கு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மீது எஸ்மா உள்ளிட்ட சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் கர்நாடக அரசு எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: