தமிழ்நாடுமாவட்டம்

ஊழலுக்கும், நேர்மைக்கும் நடக்கும் போட்டியில் நீதியின் பக்கம் மக்கள் நிற்க வேண்டும்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தை சீரமைப்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து பேசி வருகிறார். அதன்படி நேற்று திருப்பூரில் பயணத்தை முடித்து ஈரோடு மாவட்டத்தில் பயணத்தை தொடங்கினார். கோபி, கவுந்தப்பாடி, பவானி, சித்தோடு, கனிராவுத்தர் குளம், பி.பி.அக்ரகாரம், கே.என்.கே. ரோடு மற்றும் கருங்கல்பாளையம் பகுதியில் அவர் பொதுமக்களை சந்தித்தார்.

அவர் கனிராவுத்தர் குளம் பகுதிக்கு இரவு 8.45 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இரவு 10 மணிக்கு பிறகே அவரால் அங்கு வர முடிந்தது.

அங்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசவில்லை. திறந்த காரில் நின்று கொண்டு புன்னகையுடன் மக்களைப்பார்த்து 2 கைகளின் கட்டை விரல்களையும் உயர்த்தி வெற்றிச்சின்னம் காட்டினார். மக்களிடம் தனது அன்பை வெளிப்படுத்தும் வகையிலும், மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியில் உள்ள இணைந்த கைகள் சின்னத்தை காட்டும் வகையிலும் கைகளை கோர்த்து செய்கையில் உணர்த்தினார். அங்கு பெண்கள் சிலர் அவர் மீது பூக்களை சொரிந்தனர். உடனடியாக பூ போட வேண்டாம் என்று மறுத்து தடுத்தார்.

பி.பி.அக்ரஹாரம் பகுதியிலும் ஏராளமான பொதுமக்கள் குவிந்து இருந்தனர். அங்கு ஓரிரு வார்த்தைகளை பேசிய அவர் மீண்டும் சைகை மொழியில் பேசிக்கொண்டு புறப்பட்டார். ஈரோடு கே.என்.கே. ரோடு பகுதியில் கமல்ஹாசன் நற்பணி மன்றத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்.வி.மகாதேவன், கொடி ஏற்று விழா ஏற்பாடு செய்து இருந்தார். அங்கு வந்த அவர், மீண்டும் மக்களிடம் சைகை மொழியிலேயே உரையாடினார். கட்சிக்கொடியையும் அங்கு திரண்டு இருந்த மக்களை வைத்து ஏற்றச்செய்தார். அவரிடம் தீபம் ஒன்று வழங்கப்பட்டது. அதையும் பொதுமக்களிடமே திரும்ப அளித்து விட்டு, புன்னகையுடன் விடைபெற்றார். இரவு நேரத்திலும் வீட்டு மாடிகளில் இருந்து அவரை பார்க்க காத்திருந்த மக்களை நோக்கியும் கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை பார்க்க இரவு நேரத்திலும் குவிந்து இருந்தனர். அவர்கள் மத்தியில் சில நிமிடங்கள் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

செல்லும் இடத்தில் எல்லாம் தமிழ் மக்கள் மாற்றத்துக்கு தயார் ஆகிவிட்ட சாயல் இங்கே தெரிகிறது. இளைஞர்கள் முதல் முறையாக ஓட்டுப்போடப்போகும் இளைஞர்கள், இது 2 கட்சிகளுக்கோ, 3 கட்சிகளுக்கோ நடக்கும் போட்டி அல்ல. நேர்மைக்கும், ஊழலுக்கும் நடக்கும் போட்டி. அதில் நீங்கள் நிற்க வேண்டிய பக்கம் நீதியின் பக்கம்தான். அதை நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை உங்களுக்கு. காரணம், சாதி, மத, பேதமின்றி இங்கே கூடி இருக்கும் கூட்டம் கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. இவர்கள் கூடி கலையபோவதும் இல்லை.

தமிழகத்தை தலை நிமிரச்செய்யும் வட்டத்தை பார்க்கிறேன். இதில் இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் முகத்தில் எதிர்காலத்தின் நம்பிக்கை பளிச்சிடுகிறது எனக்கு. கரம் கோர்ப்போம் இளைஞர்களே, கரம் கோர்ப்போம். தமிழகத்தை சீரமைப்போம்.

உங்கள் மூத்த தலைமுறை செய்ய மறந்ததை இன்று செய்வோம். சாதி பார்த்து ஓட்டு இடாதீர்கள். சாதிப்பவனை பார்த்து ஓட்டு இடுங்கள். அது நமது கடமை. அகன்று நின்று வேடிக்கை பார்க்காதீர்கள். அரசியலில் உங்கள் கை பலம் தெரிய வேண்டும். அப்படி தெரிந்தால் நாளை நமதே. நான் உங்கள் ஆசிகளுடன் வெற்றிப்பாதையில் நடக்கிறேன் என்று நம்புகிறேன்.

இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

முன்னதாக கனிராவுத்தர் குளம் பகுதியிலும், கே.என்.கே. ரோடு பகுதியிலும் அவர் வார்த்தைகளால் பேசாமல் சென்றதால் ரசிகர்களும், தொண்டர்களும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த பிரசாரத்தின்போது மாவட்ட செயலாளர்கள் ஆனந்தம் எம்.ராஜேஸ், துரைசேவுகன், நகர செயலாளர் பரணி உள்பட பலர் உடனிருந்தனர்.

பின்னர் சித்தோட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், ‘உங்கள் ஆசியுடன், உங்கள் உதவியுடன் தமிழகத்தை சீரமைப்போம். சீரமைத்த தமிழகத்தில் மீண்டும் உங்கள் அன்பில் நனைய நான் வருவேன். அதிக நாள் இல்லை. இன்னும் 3 மாதங்கள்தான் உள்ளன. நீங்கள் நல்லபடி எனக்கு வழி சொன்னால் நான் மீண்டும் இங்கே வருவேன்.

நான் போயிருந்த கூட்டத்தில் கலகம் ஏற்படுத்த ஆட்களை அனுப்பி வைத்தார்கள். ஆனால், இந்த அன்பு வெள்ளத்தில் அவர்கள் மூழ்கிபோனார்கள். அவர்களை மெதுவாக அப்புறப்படுத்தினார்கள் நம் வீரர்கள். அவர்களுக்கு நன்றி. நாம் பழிபோடும் அரசியலும் அல்ல. பழிவாங்கும் அரசியலும் இல்ல. நாம் நாளைய தமிழகத்துக்கு வழிகாட்டப்போகும் அரசியல். மாற்றத்துக்கான புரட்சி தொடங்கி விட்டது. அதன் வீரர்கள் நீங்கள். அதை மறந்து விடாதீர்கள்,’ என்றார்.

இன்று 2-வது நாள் சுற்றுப்பயணத்தை கமல்ஹாசன் மேற்கொள்கிறார். பகல் 11 மணிக்கு திண்டல் அருகே உள்ள ஆலயமணி அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பின்னர் லக்காபுரம், மொடக்குறிச்சி பஸ் நிலையம் மற்றும் சிவகிரியில் சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். பின்னர் முத்தூர் வழியாக காங்கேயம் செல்கிறார்.

Back to top button
error: Content is protected !!