ஆரோக்கியம்

நோய்களை அறுக்கும் முடக்கத்தான்!

முடக்கறுத்தான் இட்லி, முடக்கறுத்தான் தோசை, முடக்கறுத்தான் பிரியாணி என நவீன சமையல் உலகத்தில் நீக்கமற இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கும் மூலிகை முடக்கறுத்தான். இதற்கு காரணம் நோய்களைத் தகர்த்தெறியும் தன்மை முடக்கறுத்தானுக்கு அதிகம். ஆரோக்கியத்திற்கு ஏற்ற அற்புத மூலிகையான இறைவன் நமக்கு கொடுத்த கொடை முடக்கத்தான் தாவரம்.

முடக்கறுத்தான்

உடலில் ஏற்படும் முடக்குகளை வேரறுக்கும் தன்மை இருப்பதால், முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) என்பது பெயர். கொற்றான், முடர்குற்றான், முடக்கற்றான், முடக்கொற்றான், முடக்குத் தீர்த்தான், உழிஞை போன்றவை இதன் வேறுபெயர்கள் ஆகும். வாத நோய்களுக்கு இந்த மூலிகை சிம்ம சொப்பனமாகத் திகழும்.

‘உழிஞை’ என்ற பெயரில் முடக்கறுத்தானின் வளரியல்பு பற்றி ‘நுண்கொடி உழிஞை’ என பதிற்றுப்பத்தும், ‘நெடுங்கொடி உழிஞை’ என புறநானூறும் விவரிக்கின்றன.

போர்களின் போது, அரணை முற்றுகையிடும் அறிகுறியாக இதன் மலர்களை வீரர்கள் சூடிக்கொள்வார்களாம். உழிஞையின் பெயரில் ஒரு திணையே (உழிஞைத் திணை) அமைந்திருப்பது முடக்கறுத்தானின் பெருமைக்குச் சான்று.

நன்மைகள்

வயது முதிர்ந்தவர்களுக்கு உண்டாகும் மூட்டு வலியைக் கட்டுப்படுத்தும்.

முடக்கறுத்தான் இலைகளை துவையலாகச் செய்து சாப்பிடலாம்.

தோசைக்கு மாவு அரைக்கும்போதே கொஞ்சம் முடக்கறுத்தான் இலைகளையும் சேர்த்து அரைத்து, நோய் போக்கும் முடக்கறுத்தான் தோசைகளாகச் சுவைக்கலாம்.

முடக்கறுத்தான் இலைகளை நீரில் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து, உடல் சோர்வடைந்திருக்கும் போது பருக, உடனடியாக உற்சாகம் பிறக்கும்.

இதன் இலைகளோடு, சீரகம், மிளகு, பூண்டு, வெங்காயம் கொண்டு செய்யப்படும் நறுமணம் மிகுந்த முடக்கறுத்தான் இரசம், மலக்கட்டு முதல் மூட்டுவலி வரை நீக்கும் செலவில்லா மருந்தாகும்.

இதன் இலைகளைக் காயவைத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு லேசான உடல் வலி, சோம்பல் இருக்கும்போது உபயோகப்படுத்தலாம்.

இதன் இலைப் பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இருமல் விரைவில் நீங்கும்.

கருப்பையில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்ற, பிரசவித்த பெண்களின் அடிவயிற்றுப் பகுதியில் முடக்கறுத்தான் இலைகளை அரைத்துப் பற்றுப் போடும் வழக்கம் அநேக இடங்களில் உண்டு.

வீட்டு மருத்துவம்

நல்லெண்ணெய்யில் இதன் இலைகளைப் இட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெய்யை அடிபட்ட இடங்களில் தடவ வலி குறையும். முடக்கறுத்தான் முழுத் தாவரம், வாத நாராயணன் இலைகள், நொச்சி வேர், பேய்மிரட்டி இலைகள் ஆகியவற்றைச் சேர்த்தரைத்து, நல்லெண்ணெயோடு சேர்த்துக் காய்ச்சித் தயாரிக்கப்படும் எண்ணெயை உடல் பிடிப்பு தைலமாகப் பயன்படுத்த வலி, சுளுக்குப் பிடிப்புகள் மறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: