விளையாட்டு

ஐ.பி.எல் திருவிழா.. சென்னை-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை..!

ஐ.பி.எல். 20221 கிரிக்கெட் தொடரின் 2வது லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

14-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் நேற்று தொடங்கியது. இதன் 2வது லீக் ஆட்டம் இன்று (சனிக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் தொடக்க ஆட்டத்தில் வென்று வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் விளையாடும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

கடந்த ஆண்டு அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், காயம் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேப்டனாக முதல்முறையாக களம் காண்கிறார்.

இந்நிலையில் 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு முதல்முறையாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறாமல் போனது. இதற்கு சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா விலகியதும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. இதற்கிடையில் இந்த சீசனில் சுரேஷ் ரெய்னா மீண்டும் திரும்பி இருப்பது சென்னை அணியின் பேட்டிங் வரிசையை கூடுதலாக பலப்படுத்தும்.

மேலும் லுங்கி நிகிடி உள்பட 3 தென் ஆப்பிரிக்க வீரர்கள் தனிமைப்படுத்துதலில் இருப்பதால் இந்த ஆட்டத்தில் களமிறங்க மாட்டார்கள் என தெரிகிறது.

அதேபோல் ரிஷப் பண்ட்டின் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முக்கிய வீரர்களான ரபாடா மற்றும் அன்ரிச் நோர்ஜே தனிமைப்படுத்துதலில் இருப்பதால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி சென்னை அணி 15 முறையும், டெல்லி அணி 8 முறையும் வென்று இருக்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்:

சென்னை சூப்பர் கிங்ஸ்: மொயீன் அலி அல்லது ருதுராஜ் கெய்க்வாட், பாப் டுபிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், வெய்ன் பிராவோ, கிருஷ்ணப்பா கவுதம், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவன் சுமித், ரிஷப் பண்ட் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், ஹெட்மயர், கிறிஸ் வோக்ஸ், ஆர்.அஸ்வின், உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா, இஷாந்த் ஷர்மா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: