இந்தியா

CBSE தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிமுகம் – கல்வியாண்டு இரு பிரிவாக பிரிக்கப்படும்!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 2022 ஆம் கல்வியாண்டு இரண்டாக பிரிக்கப்பட உள்ளதாக CBSE தெரிவித்துள்ளது. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் அடுத்த மார்ச்சில் இரு பருவ தேர்வுகள் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஆண்டு தேர்வுகள் நடத்த முடியாத காரணத்தால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. 2021-22 கல்வியாண்டு ஜூன் 14 முதல் தொடங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் தொடர்ந்து ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பேரிடர் காலத்தில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கல்வியாண்டு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பருவத்திற்கான தேர்வுகள் 2021 ஆம் ஆண்டு நவம்பர் – டிசம்பர் மாதத்திலும், இரண்டாம் தேர்வு 2022 ஆம் ஆண்டுக்கான மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிபிஎஸ்இ வாரியத்தின் இயக்குநர் ஜோஸப் இமானுவேல் கூறுகையில், கடந்த ஆண்டு போல தேர்வுகளில் குழப்பம் வராமல் இருக்க இந்த ஆண்டு இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பருவத்துக்கான பாடப் பிரிவுகள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு இந்த மாதத்தில் அறிவிக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் வழக்கம் போல் மாணவர்களுக்கு வழங்கப்படும் இன்டர்னல் மதிப்பீடு, செய்முறைத் தேர்வு போன்றவை வழக்கம் போல் நம்பகத்தன்மையாக நடத்தப்பட்டு அந்த மதிப்பெண்களும் கருத்தில் கொள்ளப்படும். மேலும் சூழலுக்கேற்ப இன்னும் 4 முதல் 8 வாரங்களில் இந்த தேர்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் முதல் பருவ தேர்வுகளில் அனைத்து வினாக்களும் சரியான விடையை மட்டும் தேர்ந்தெடுத்து எழுதுவது போன்று (Multiple Choice Questions (MCQ)) அமைக்கப்பட்டிருக்கும். இதற்காக மாணவர்களுக்கு ஓஎம்ஆர் ஷீட் வழங்கப்படும். இந்த பதில் அளிக்கும் ஷீட்டில் மாணவர்கள் சரியான பதிலை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது. இந்த தேர்வுகள் 90 நிமிடங்கள் மட்டுமே நடத்தப்படும். மேலும் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் இந்த தேர்வுக்கான வினாத்தாள் அனுப்பப்படும். சிபிஎஸ்இ வாரியத்தால் நியமிக்கப்படும் தேர்வு கண்காணிப்பாளர்கள் பார்வையில் தேர்வுகள் நடத்தப்படும்.

மாணவர்கள் ஓஎம்ஆர் சீட்டில் பதிலை குறிப்பிட வேண்டும், அந்த ஷீட் சிபிஎஸ்இ தளத்தில் பதிவேற்றப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டு, மதிப்பெண்கள் அன்றே அறிவிக்கப்படும். இரண்டாம் பருவ தேர்வு 2022 ஆம் ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும். இந்த தேர்வு 2 மணி நேரத்திற்கு நடத்தப்படும். இந்தத் தேர்வில் மாணவர்கள் குறுகிய விடை, நீண்ட விடை அளிக்கும் விதத்தில் கேள்விகள் கேட்கப்படும். ஒரு வேலை கொரோனா பரவல் அதிகமாக இருந்து 2 மணி நேரம் தேர்வு நடத்தமுடியாத நிலை இருந்தால் முதல் பருவ தேர்வு போல 90 நிமிடங்கள் தேர்வு நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: