#INDvsENG 2வது டெஸ்ட் .. முதல் நாள் ஆட்டத்தின் இறுதியில் இந்தியா 300-6..

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் இன்று சேப்பாக்கத்தில் துவங்கியது.. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரில் ஸ்டோன் பந்துவீச்சில் ஷுப்மான் கில் வெளியேறினார். அடுத்து வந்த புஜாரா, ரோஹித் சர்மாவுடன் இணைந்தார். புஜாரா நிதானமாக ஆட மறுபுறம் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்தார். இதனையடுத்து, புஜாரா 21 ரன்னில் லீச் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த கேப்டன் கோலி 5 பந்துகளைச் சந்தித்த நிலையில் க்ளீன் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். இந்திய அணி 86 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து களமிறங்கிய ரஹானே ரோஹித் சர்மாவுடன் இணைந்து நிதானமாக ஆடத் தொடங்கினார். அதிரடியாக ரோஹித் சர்மா தனது இயல்பான ஆட்டத்துக்கு திரும்பினார். அணியைச் சரிவிலிருந்து மீட்ட ரோஹித் சர்மா 130 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். டெஸ்ட் அரங்கில் ரோஹித் சர்மாவுக்கு 7-வது சதமாக அமைந்தது.
இதனையடுத்து, 150 ரன்களை பூர்த்தி செய்த ரோஹித் சர்மா 161 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடி வந்த ரஹானே 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில், ஆடிய ரிசப் பண்ட் 33 ரன்னுடன் அக்சர் பட்டேல் 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் லீச், மொயின் அலி தலா 2 விக்கெட், ஓலி ஸ்டோன் ஒரு விக்கெட் எடுத்தனர்.