விளையாட்டு

#INDvsAUS: லாபுசாக்னே, புகோவ்ஸ்கி அரைசதம்; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!

சிட்னியில் நடைபெற்று வரும் இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.

அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் ஐந்து ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அறிமுக வீரர் வில் புகோவ்ஸ்கியுடன் மார்னஸ் லபுசாக்னே ஜோடி சேர்ந்த அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

பின்னர் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் சிறிது நேரத்திற்கு நிறுத்தப்பட்டது. மழை நின்றதும் இன்னிங்ஸைத் தொடங்கிய புகோவ்ஸ்கி – லபுசாக்னே இணை இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறினாலும், விக்கெட் இழப்பை தடுத்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வில் புகோவ்ஸ்கி தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் கடந்தார். அதன்பின் 54 ரன்கள் எடுத்திருந்த புகோவ்ஸ்கி, வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனியிடம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

இதையடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய லபுசாக்னே அரைசதத்தைக் கடந்தார்.

இதன் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 170 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் மார்னஸ் லபுசாக்னே 67 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் சிராஜ், சைனி தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

Back to top button
error: Content is protected !!