பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பரபரப்பு முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ விவகாரம் தொடர்பாக நேற்று மத்திய அமைச்சரவையில் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான மசோதா, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த திட்டம் சட்டமாக மாறும் பட்சத்தில், அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களுக்கும் ஒரே நேரத்தில் லோக்சபா தேர்தல் நடத்தப்படும். அதன்பிறகு, 100 நாட்களுக்குள் நகர் மற்றும் பஞ்சாயத்து தேர்தல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை 32 கட்சிகள் மற்றும் முக்கிய நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆதரித்துள்ளதாக ராம்நாத் கோவிந்த் கமிட்டி தெரிவித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட 15 கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து வருகின்றன.