நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை (நவம்பர் 25) முதல் தொடங்குகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது.
மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். இந்நிலையில், இந்த சந்திப்பு சூடுபிடித்ததாக தெரிகிறது.
அதானி குழுமத்திற்கு எதிரான அமெரிக்க லஞ்ச குற்றச்சாட்டுகள் மற்றும் மணிப்பூரில் நிலவும் பதற்றம் குறித்து இந்த கூட்டங்களில் விவாதிக்க காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் பிரமோத் திவாரி தெரிவித்தார். மேலும், நாட்டில் அதிகரித்து வரும் மாசுபாடு, ரயில் விபத்துகள் போன்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறுகிறது. இதில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு நவம்பர் 29ஆம் தேதி தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தெரிகிறது. இதுதவிர வங்கிச் சட்டத் திருத்தம் மற்றும் இதர மசோதாக்கள் இந்தக் கூட்டங்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Posted in: இந்தியா