நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்குகிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தலைமை தேர்தல் கமிஷனர் நியமன மசோதா உள்ளிட்ட நான்கு முக்கிய மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
4 முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்யவும், புதிய பார்லிமென்ட் வளாகத்திற்கு இடம் மாற்றவும், பார்லிமென்டின் சிறப்பு அமர்வு இன்று துவங்குகிறது. 18ம் தேதியில் இருந்து 5 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அனைவரது கவனமும் குவிந்துள்ளது.
நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலின்படி, அமர்வின் முதல் அமர்வில், அரசியலமைப்பு பேரவை ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணத்தின் நினைவுகள் விவாதிக்கப்படும். இந்த அமர்வில், தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான மசோதா, வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, தபால் சேவை மசோதா, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்பட உள்ளன. ஆனால் மிகவும் சர்ச்சைக்குரிய “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா இம்முறை அறிமுகப்படுத்த போவதில்லை. அதேபோல், இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்றும் மசோதாவும் இந்தத் தொடரில் அறிமுகப்படுத்த போவதில்லை.
இன்று நாடாளுமன்ற கூட்டம் பழைய கட்டிடத்தில் தொடங்குகிறது. வடமாநிலங்களில் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதால், நாடாளுமன்ற அலுவல்கள் நாளை புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படுகிறது.
