நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்திலிருந்து ‌ முருகன் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி படகில் அவரோடு சேர்த்து நான்கு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

கோடியக்கரை அருகே தென் கிழக்கு திசையில் 15 கடல் மைல் நாட்டிக்கல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 8:00 மணி அளவில் செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவரின் பைபர் படகில் அத்துமீறி ஏறிய இலங்கை கடல் கொள்ளையர்கள் கத்தி முனையில் அவர்களை மிரட்டி உள்ளனர்.

 

மேலும் செருதூரை சேர்ந்த படகு உரிமையாளர் என்.முருகனை மற்றும் 3 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் இரும்பு ஆயுதங்களாலும் கட்டைகளாலும் கடுமையாக தாக்கியுள்ளனர். மீன்பிடி படகில் இருந்த வலை,திசை காட்டும் ஜிபிஎஸ் கருவி,செல்ஃபோன், டார்ச் லைட் என சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருள்களை கொள்ளையடித்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கையில் வெட்டு காயத்துடன் கடலில் குதித்து தப்பிக்க முயன்ற முருகனை சக மீனவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த படகில் இருந்த மூன்று மீனவர்களும் உள் காயத்தோடு உயிர் தப்பிய நிலையில் அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாகையைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
Exit mobile version