மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டண சலுகையை மீண்டும் வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. இது தொடர்பாக கேள்வி ஒன்றிற்கு மக்களவையில் பதிலளித்த ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 2019-20ம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு 59 ஆயிரத்து 837 கோடி ரூபாயை ரயில்வேத்துறை மானியமாக வழங்கியுள்ளது என்றார்.
குறைந்தபட்சம் ஸ்லீப்பர் மற்றும் மூன்றாவது ஏசியில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டில் சலுகை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளதாகவும், அது குறித்து பரிசீலித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார். கொரோனா ஊரடங்கின் போது மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.