இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பெரிய பரிசுத் தொகையுடன் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகளை நடத்துகிறது.
இந்த வினாடி-வினா போட்டிக்கான பதிவு செய்யும் பணி ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், ஆர்வமுள்ள மாணவர்கள் இம்மாதம் (செப்டம்பர்) 17ஆம் தேதி இரவு 9 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் செப்டம்பர் 19 முதல் 21 வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், நாட்டின் பொருளாதாரம், ரிசர்வ் வங்கி குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தவும் இந்த வினாடி-வினா போட்டிகள் நடத்தப்படுகின்றன. செப்டம்பர் 1 ஆம் தேதியின்படி 25 வயதுக்கு உட்பட்ட மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பைப் படிக்கும் மாணவர்கள் போட்டிக்குத் தகுதியானவர்கள். நாடு முழுவதும் நான்கு கட்டங்களாக ஆன்லைனில் நடத்தப்படும் இந்த வினாடி வினா போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையுடன் சான்றிதழ் வழங்கப்படும். மண்டல அளவில் திறமையை வெளிப்படுத்தியவர்களுக்கு தேசிய அளவில் இறுதிச் சுற்று நடத்தப்படும்.
தேசிய அளவில் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு ரூ.10 லட்சம், ரூ.8 லட்சம் மற்றும் ரூ.6 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். மண்டல அளவில் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெறுவோருக்கு முறையே ரூ.5 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.3 லட்சம் வழங்கப்படும். மாநில அளவில் முறையே ரூ.2 லட்சம், ஒன்றரை லட்சம் மற்றும் ஒரு லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகிறது. பதிவு மற்றும் இதர விவரங்களுக்கு இந்த https://www.rbi90quiz.in/ லிங்கை கிளிக் செய்யவும்.