பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று ரஷ்யா செல்கிறார். இதையொட்டி, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பிரதமர் மோடியை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த இரண்டு நாட்களில் அவர் மாஸ்கோவில் பல முக்கிய கூட்டங்களில் பங்கேற்பார். 22-வது ஆண்டு இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மோடி சந்திக்கிறார். இரு நாட்டு தலைவர்களும் சமகால பிராந்திய பிரச்சனைகள் மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பார்கள்.
முன்னதாக, ஆண்டு உச்சி மாநாடு டிசம்பர் 6, 2021 அன்று புது தில்லியில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக புடின் நம் நாட்டுக்கு வந்தார். கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி ரஷ்யா செல்வது இதுவே முதல்முறை. கடைசியாக 2019-ம் ஆண்டு ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.