நாடு முழுவதும் உள்ள, சுங்கச்சாவடிகளின் கட்டணங்களை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலைகளை, பெரும்பாலான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வாகன ஓட்டிகளிடம், குறிப்பிட்ட தூரங்களில் சுங்க வரி கட்டணத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசூலித்து வருகிறது. அந்த வகையில், போக்குவரத்து விதிகள் 2008ன் படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி திருத்தப்பட்ட கட்டணங்களை, சாலை போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரை செய்ய வேண்டும்.
- Advertisement -
அதன் அடிப்படையில், வருகிற ஏப்ரல் 1 முதல் கார்கள் மற்றும் இலகு ரக வாகனங்களுக்கான கட்டணம் 5% ம், கனரக வாகனங்களுக்கான கட்டணம் 10% ம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை தினமும் சுமார் 20,000 வாகனங்கள் இந்த தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் நிலையில், அடுத்த 6 மாதத்தில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, கூட்ட நெரிசல் மற்றும் நேர விரயம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக தானியங்கி நம்பர் பிளேட் ரீடர் கேமராக்களை (ANPR) கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக, சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து இருந்தார். இதை வைத்துப் பார்க்கும்போது விரைவில் இது சார்ந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.