கேரளாவில் பரவும் நிபா வைரஸ் வௌவால்கள் மூலம் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் நிபா வைரஸால் 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 678 பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பும் பணியில் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேரடியாகக் கண்காணித்து வருகிறார்.
இந்நிலையில், குற்றியாடு பகுதியில் வௌவால்கள் மூலம் நிபா வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து வெளவால்களை பிடித்து மத்திய சிறப்புக் குழுவினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நிபா வைரஸ் பரவுவதை தடுக்க கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 24ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அரசு தெரிவித்துள்ளது.
