ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார் மோடி!
ரஷியப் பயணத்துக்குப் பிறகு பிரதமர் மோடி ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார்.
கடந்த மாதம் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை மோடி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் கட்டித்தழுவி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். அமைதியை நிலைநாட்ட இந்தியா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தொடங்கியதில் இருந்தே, பேச்சுவார்த்தை நடத்துவதுதான் மோதலைத் தீர்க்க ஒரே வழி என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. சமீபத்தில் 2 நாள் பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது, போர் ஒரு தீர்வாகாது என்று புதினுக்கு மோடி தெரிவித்தார்.
இந்நிலையில் அவர் ஆகஸ்ட் மாதம் உக்ரைன் செல்லவுள்ளார். ஆகஸ்ட் 23 அன்று, அவர் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்திக்கிறார். மோடியின் உக்ரைன் பயணம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் மோடியின் பங்கு முக்கிய பங்கு வகிக்கும்.