பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று போலந்து சென்றுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பயணத்தின் மூலம் பிரதமர் மோடி மற்றொரு சாதனையைப் படைத்துள்ளார். 45 ஆண்டுகளுக்கு பிறகு போலந்து செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார்.
இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் கடைசியாக 1979ஆம் ஆண்டு போலந்துக்கு விஜயம் செய்தார். அதன் பிறகு இதுவரை இந்திய பிரதமர்கள் யாரும் அந்த நாட்டுக்கு செல்லவில்லை.
இந்த பயணத்தின் போது, பல்வேறு முக்கிய துறைகளில் கூட்டாண்மை, பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு போன்ற விஷயங்களை போலந்து அதிபருடன் மோடி விவாதிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரின் போது போலந்து இந்திய மாணவர்களுக்கு உதவியது. உக்ரைனில் இருந்து சுமார் 4,000 இந்திய மாணவர்கள் போலந்துக்குள் நுழைந்து விமானம் மூலம் வீடு திரும்பினர் என்பது தெரிந்ததே. இதேபோல், இரண்டாம் உலகப் போரின்போது சுமார் 6,000 போலந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்தியப் பகுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
இதனிடையே போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இம்மாதம் 23ம் தேதி உக்ரைன் செல்கிறார். உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.