இந்த நிதியாண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இது தவிர, ஐந்து முக்கிய பணிகளுக்கான காலக்கெடுவும் முடிவடைகிறது. இவற்றை முடிக்க இன்னும் ஐந்து நாட்களே உள்ளதால், விரைந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அவைகளை பற்றி கீழே விரிவாக காணலாம்.
ஆதார் – பான் இணைப்பு
ஆதார் மற்றும் பான் கார்டு ஆகியவை அரசாங்க திட்டங்களைப் பெறுவதற்கும் நிதி பரிவர்த்தனைகளை நடத்துவதற்கும் முக்கியமானவை. இவை இரண்டையும் கடைசி வாய்ப்பாக மார்ச் 31-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும், இல்லையெனில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பான் கார்டு இயங்காது என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட் நாமினியின் பதிவு
நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து இன்னும் ஒரு நாமினியை பதிவு செய்யவில்லை என்றால், மார்ச் 31க்குள் அதைச் செய்ய வேண்டும். இதற்கான காலக்கெடுவை செபி வழங்கியுள்ளது. நாமினியை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றால், அதற்கான அறிவிப்பை வழங்க வேண்டும். இல்லையெனில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கணக்குகள் முடக்கப்படும்.
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா
மூத்த குடிமக்களுக்காக தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனாவில் (PMVVY) முதலீடு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும். PMVVY என்பது ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுத் திட்டமாகும். இதில் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 7.40 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
வருமான வரி விலக்கு
2022-23 நிதியாண்டு மார்ச் 31 ஆம் தேதி முடிவடைவதால், பிரிவு 80C இன் கீழ் வருமான வரி விலக்கு பெற ஐந்து நாட்கள் மட்டுமே உள்ளன. ஒருவர் சுகன்யா சம்ரித்தி யோஜனா, பொது வருங்கால வைப்பு நிதி, ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்களில் வருமான வரி விலக்கு பெற முதலீடு செய்யலாம்.
எல்ஐசி உயர் பிரீமியம் பாலிசி
எல்ஐசியில் அதிக பிரீமியம் பாலிசி எடுத்து வருமான வரி விலக்கு பலன்களைப் பெற மார்ச் 31 கடைசி தேதியாகும். அதிக பிரீமியம் பாலிசி எடுக்க விரும்புபவர்கள் இந்த ஐந்து நாட்களுக்குள் எடுத்தால் வரிவிலக்கு பெறலாம்.